பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைப் பறவை

439

அந்த உல்லாசப் பேர்வழியைச் சுற்றி நின்ற கூட்டத்தை நோக்கி ஒரு நோட்டம் விட்டான் - அவ்வளவுதான்; எடுத்த ஆசாமி புலப்பட்டு விட்டான் அவனுடைய எறும்புக் கண்களுக்கு! - உடனே பாய்ந்து சென்று அவனிடமிருந்த பர்ஸைப் பிடுங்கி அந்த உல்லாசப் பேர் வழியிடம் கொடுத்துவிட்டு, "ஏமாந்து நானூறு ரூபா கொடுத்தாலும் கொடுப்பீர்கள்; ஏமாறாமல் ஒரு நாலணா, ஒரே ஒரு நாலணாகூடக் கொடுக்க மாட்டீர்கள், இல்லையா?" என்றான் அவன்.

இதைக் கேட்டதும் அவன் எதிர்பார்த்தபடி அந்த உல்லாசப் பேர்வழி அவமானத்தால் குன்றிஅப்படியே நின்றுவிடவில்லை-அந்த மான அவமானமெல்லாம்தான் அவனைப் போன்றவர்களுக்குக் கிடையாதே? அவற்றைத்தான் தங்கமாகவும், வைரமாகவும், நோட்டுக் கற்றைகளாகவும் அவர்கள் மாற்றிக்கொண்டு விடுகிறார்களே? - எனவே, முத்து கொடுத்த ‘மணிபர்'ஸை முத்துவின் கையிலேயே வைத்து மூடிப் பிடித்துக்கொண்டு, "எல்லாம் உன்னுடைய திருவிளையாடல்தானா? இந்த நாடகமெல்லாம் என்னிடம் பலிக்காது!" என்று உறுமிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தான் அவன்.

"அகப்பட்டுக் கொண்டானா, ஆசாமி?" என்று நீட்டி முழக்கிக் கேட்டுக்கொண்டே அவனுக்கு அருகில் வந்தார் ஒருவர்.

"அதுவும் சும்மாவா, கையும் களவுமாக!" என்றார் அவரைத் தொடர்ந்து வந்த இன்னொருவர்.

அதற்குள் அங்கே வந்த ஸி.ஐ.டி. ஒருவன், 'வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை ; அதற்குள் ஆரம்பித்துவிட்டான், தன் கை வரிசையைக் காட்ட!' என்று 'முத்தாய்ப்பு' வைத்தபடி முத்துவின் கழுத்தில் கையை வைத்துத் தள்ளிக்கொண்டே எதிர்த்தாற்போலிருந்த போலீஸ் வா'னை நோக்கி நடந்தான்.

"இல்லை ஸார், நான் திருடவே யில்லை, ஸார்!" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் முத்து - கேட்கவில்லை; போலீஸார் கேட்கவேயில்லை!

ண்டா, திருட்டுப் பயலே! உள்ளே எப்படியிருந்தாலும் வெளியே ‘அந்தஸ்து வாய்ந்த பிரமுக'ராக விளங்கும் அந்த உல்லாசப் பேர்வழியின் வார்த்தைக்கு முன்னால் உன்னுடைய வார்த்தை எடுபடுமாடா?-போ! திருந்தியது போதும்; நீ திருடனாகவே சிறைக்குப் போ!