பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

விந்தன் கதைகள்

"திறமைக்கு இடம் கொடுத்தால் 'ஆமாம் சாமி'க்கு இடம் இல்லாமற் போய்விடுகிறதே? இவ்வளவு பெரிய உலகத்தில் தன்னைப் புத்திசாலி' என்று ஒப்புக்கொள்ள 'ஒரே ஒருவ'னாவது வேண்டாமா, முதலாளிக்கு?"

"ம், எவன் வந்தாலும் அவன் தலை கனக்கப் போவது மட்டும் நிச்சயம்!"

"தலை கனத்தால் கனத்துவிட்டுப் போகட்டும்; தன்னுடைய பதவியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவர்களுடைய வாயில் அவன் மண்ணைப் போடாமலிருந்தால் சரி!"

"அப்படித்தான் நினைத்தான் போர்மேன் பொன்னையா-ஆனால் என்ன ஆயிற்று? ஒரே நாள் காய்ச்சலில் ஆளே அவுட்"

"அவன் மட்டுமா?-பொழுது விடிந்தால் அவனைப்போல் எத்தனையோ பேர் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் புத்தி வருகிறதா, எவனுக்காவது? 'ஊஹும்!"

"தான் வாழ்ந்தால் போதும் என்று எவன் நினைக்கிறானோ, அவன் தலையில் இடியாவது விழுகிறதா?-அதுவும் இல்லை!"

"எங்கே விழுகிறது? - அதுவும் நல்லவர்களைத்தான் விரும்புகிறது; கெட்டவர்களை விரும்பமாட்டேன் என்கிறது!"

"அதைச் சொல்லு, முதலில்!" என்று சொல்லிக்கொண்டே கதிர்வேலு ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான்.

"ம், எல்லாம் முதல் தேதி பிறந்தால் தெரிந்து விடாதா? - நீ எனக்கும் ஒரு பீடி இருந்தால் கொடு!" என்றான் கோவிந்தசாமி.

"இதிலும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான், இருவரும்!" என்று தான் பிடித்துக்கொண்டிருந்த பீடியில் பாதியைப் பிட்டு அவனிடம் கொடுத்தான் கதிர்வேலு.

இன்றைய நேற்றைய நட்பா, அவர்களுடையது? கடந்த இருபது வருட காலத்திய நட்பாயிற்றே?- எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயிருந்தார்கள் அவர்கள், மனைவிமார்களைத் தவிர!