பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவி

451

முதல் தேதி பிறந்தது. ஆனால் கதிர்வேலு எதிர்பார்த்தபடி, அருணாசலம் 'போர்மே'னாக நியமிக்கப்படவில்லை; கதிர்வேலே போர்மேனாக நியமிக்கப்பட்டான்.

காரணம், மற்றவர்களுக்குப் பிடிக்காத அருணாசலத்தைவிடப் பிடிக்கும் கதிர்வேலே மேல் என்று முதலாளி நினைத்ததுதான்!

புறாவைப் பிடிக்க வேண்டுமென்றால் புறாவைக்காட்டித்தானே பிடிக்க வேண்டும்? காக்கையைக் காட்டிப் புறாவைப் பிடிக்க முடியுமா?

இது தெரியாத அருணாசலம் முதலில் கொஞ்சம் புழுங்கினான். பிறகு, 'பகையாளியின் குடியை உறவாடிக் கெடு!' என்று எண்ணித் துணிந்தவனாய் வழக்கம்போல் எல்லோரையும் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்று, "என்ன இருந்தாலும் அதிர்ஷ்டக்காரர் நீங்கள்; உங்களுக்கு என் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்!" என்றான் வாயெல்லாம் பல்லாக.

"அப்படி என்று ஒன்று இருக்கிறதா என்ன, உனக்கு" என்று வியப்புடன் கேட்டான் ஆரோக்கியசாமி.

"எப்படியென்று?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் அருணாசலம்.

"ஒன்றுமில்லை!" என்று சொல்லிக்கொண்டே அவனை விட்டு அப்பால் சென்ற ஆரோக்கியசாமி "இவனுக்காவது, இதயம் என்று ஒன்று இருப்பதாவது!" என்று தனக்குத்தானே முனகிக் கொண்டான்.

எதிர்பாராத விதமாகக் கதிர்வேலுக்குக் கிடைத்த பதவி கோவிந்தசாமியை ஒரே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது. ஒரு கணம் ஒன்றும் பேச முடியாமல் தழுதழுத்து நின்ற அவன், மறுகணம் தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு, "வாழ்த்தாதே, முதலில் உன் வாயால் அவனை வாழ்த்தாதே!" என்று கத்தினான்.

"ஏன், அவரை நான் வாழ்த்துவது உனக்குப் பிடிக்கவில்லையா?" என்று சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதினான் அருணாசலம்.

அதைப் புரிந்து கொள்ளாத அப்பாவி கோவிந்த சாமியோ, "ஆம், அவனை நீ வாழ்த்துவது எனக்குப் பிடிக்கத்தான் இல்லை. அதிலும், அவனுக்குக் கிடைத்த பதவி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது