பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

விந்தன் கதைகள்

என்று நீ சொல்வது அவனுடைய திறமையைக் குறைத்துப் பேசுவது போலிருக்கிறது. போ, எட்டிப் போ!" என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டுத் தன் நண்பனை அப்படியே அணைத்துக்கொண்டு விட்டான்!

இந்தச் சமயத்தில், "முதலாளி உங்களைக் கூப்பிடுகிறார்!" என்று ஏவலாள் வந்து சொல்லவே, "விடு, என்னை!" என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக்கொண்டே அவனுடைய பிடியிலிருந்து அவசர அவசரமாக விலகி, அவருடைய அறையை நோக்கி நடந்தான் கதிர்வேலு.

அவனுடைய 'அவசரம்' கோவிந்தசாமியை என்னவோ செய்வது போலிருந்தது. இதற்குள் இவனிடம் ஏன் இந்த மாறுதல்? ஒருவேளை இவனையும் அந்தப் பாழும் பதவி 'ஆமாம் சாமி'யாக்கி விடுமோ? தான் வாழப் பிறர் வாயில் மண்ணைப் போட வைத்து விடுமோ?' என்று தனக்குத்தானே கேள்விமேல் கேள்வியாக எழுப்பிக்கொண்டு நின்றான்.

அவனுடைய நிலையை ஒருவாறு புரிந்து கொண்டவன்போல், "பதவி வேலை செய்ய ஆரம்பித்து விட்டதப்பா, பதவி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது!" என்றான் ஆரோக்கியசாமி பெருமூச்சுடன்.

றக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முதலாளியின் அறையை விட்டுக் கதிர்வேலு வெளியே வந்தபோது, "விழுந்தது; முதலாளி சொன்னதெல்லாம் என் காதிலும் விழத்தான் விழுந்தது. அதிலே ஒரு 'பியூட்டி' என்னவென்றால் எல்லாவற்றுக்கும் என்னைப்போல் நீங்களும் 'ஆமாம்' போட்டுக்கொண்டிருந்தீர்கள் பாருங்கள், அதுதான் அங்கே பாயிண்ட் " என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான்; கையோடு கையைச் சேர்த்துப் பிசைந்தபடி அருணாசலம் அவனுக்குப் பின்னால் கூனிக் குறுகி வந்து கொண்டிருந்தான்.

"நீதானா!" என்றான் கதிர்வேலு - அவன் குரலில் இப்போது அவனையும் அறியாமல் ஓர் 'அலட்சிய பாவம்' இடம் பெற்றிருந்தது.

"ஆமாம் ஸார், நானேதான் ஸார்!" என்றான் அருணாசலம், அத்தனை நாட்களும் இல்லாத 'ஸா'ரைப் போட்டு!