பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

விந்தன் கதைகள்

வந்த இடத்தில்தான் இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. என்னை மன்னித்துவிடு, அக்கா!" என்றான் அவன்.

ஜானகிராமன் வைஜயந்தியின் பக்கம் திரும்பி, "தாயிற் சிறந்ததொரு கோயில் இருக்கிறதோ இல்லையோ, ஒழுக்கம் உயிரினும் சிறந்தது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!" என்றான்.

அதற்குள் அவர்கள் இறங்கவேண்டிய இடத்தில் பஸ் வந்து நின்றது. மூவரும் இறங்கி வீட்டையடைந்தனர்.

"அழகாய்த்தாண்டா இருக்கு, நீ அவளை அழைத்துக் கொண்டு இந்நேரம் தன்னந் தனியாகத் திரிந்துவிட்டு வருவது! அவளுக்கு வெட்கமில்லா விட்டாலும் உனக்காவது இருக்கவேண்டாமோ?" என்றாள் அன்னை.

"அம்மா உன்னை அன்னையாகப் பெற்ற எனக்கு வெட்கம் ஒரு கேடா, அம்மா?" என்றான் ஜானகிராமன்.

"உஸ்..... தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!" என்றாள் வைஜயந்தி.