பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

விந்தன் கதைகள்

"அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ ?"

"இல்லை."

"அங்ஙனமிருந்தும் சித்திர விளக்கத்தோடு நிற்காமல் எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது எற்றுக்கு?"

"எடுத்துக் காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர் கண்ணில் பதிவதோடு, கருத்திலும் பதிய வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது!"

"அம்முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம் சிற்றறிவாளரே, யாமும் கையாண்டு வருகிறோம். நீர்தான் பார்த்திருப்பீரே, சிங்கத்தின் பிடரிபோன்று எமது சிகையை வெட்டிச் சீவி விட்டுப் பார்த்தோம்; கவிஞன் என்று கழலுவார் கண்டிலோம். கவின்மிகு அங்கி கால் வரை நீண்டு தொங்குமாறு அணிந்து பார்த்தோம்; பாவலர் என்று பகருவார் பார்த்திலோம். தாடியும் மீசையும் தழைத்து வளர, தடி கொண்டு ஊன்றித் தளர்நடை நடந்தும் பார்த்தோம்; 'ஏ, பிச்சைக்காரா! ஒன்றும் இல்லை, போ!' என்று விரட்டு வாரைத்தவிர, 'பிறவிக் கவிஞரே!' என்று முகம் மலர, அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம்!"

"அதாவது, கவிதை புனைவதைத் தவிர!" என்றேன் நான், இடை மறித்து.

"அன்று, அன்று; இன்று காலைப் போது கூட, 'காலை எழுந்தவுடன் காநீர்!' என்று யாம் கவிதை புனைந்து கொண்டேதான் எழுந்தோம்!"

"காநீரா! அது என்ன, காநீர்?"

"கவிதை புனைவதோடு நிற்காமல் தமிழையும் வளர்க்கிறோம் ஐயா, தமிழையும் வளர்க்கிறோம். தேயிலைச் சாறு கலந்த பானம் தேநீர்; காபிச் சாறு கலந்த பானம் காநீர்!"

"என்னே உங்கள் பேரறிவாற்றல், என்னே உங்கள் பேரறிவாற்றல்!"

"இம்மட்டோ, இம்மட்டோ ? அற்றை நாளில் 'மக்கள்' இருந்தனர், கம்பனை இனம் கண்டு கொண்டு 'கவிச் சக்கரவர்த்தி' எனக் கழல, பகர, விளிக்க! இற்றை நாளில் மக்களா உள்ளனர்?