பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செய்ததும் செய்வதும்

னக்கு உலகம் தெரிந்த நாளிலிருந்தே அவன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் - அவன் என்றால் அது அருணாசலத்தைக் குறிக்கும்; அவர் என்றால் அது பாங்கர் வேங்கடாசலபதியைக் குறிக்கும்.

பாங்கர் வேங்கடாசலபதியின் பங்களாவுக்குப் பக்கத்தில்தான் அருணாசலத்தின் பன்றிக் குடிசை இருந்தது - ஆம், பன்றிக் குடிசைதான் - யாரோ பன்றி வளர்ப்பதற்காகப் போட்டு வைத்திருந்த குடிசையை அவர்கள் ஐம்பது ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்கள் - ஐம்பது ரூபாய் என்றால் அவர்களுக்கு லேசா? - அதற்காக நம் மத்திய சர்க்காரைப் பின் பற்றி அவர்கள் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் அல்லவா வகுக்க வேண்டியிருந்தது!

இத்தனைக்கும் அந்த வீட்டில் வருவாய்க்கு வழி தேடுவோர் ஒருவர் அல்லர்; மூவர்! - மூவர் என்றால் அருணாசலத்தின் தாயையும் தந்தையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் - தந்தை தணிகாசலத்துக்குத் தோட்ட வேலை; தாய் வள்ளியம்மைக்கு வீடு கூட்டும் வேலை; மகன் அருணாசலத்துக்கோ கொல்லன் பட்டறையில் துருத்தி ஊதும் வேலை!- 'அதற்குள் அவனும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டானா? என்ன வயதிருக்கும்?' என்று கேட்கிறீர்களா?-யார் கண்டார்கள்? - அவனுக்கென்ன, பிறந்த நாள் விழாவா கொண்டாடப்போகிறார்கள்-ஜன்ம நட்சத்திரம், ஜாதகம் எல்லாம் கணித்து வைக்க?- அதிலும், அஷ்ட திக்குப் பாலகர்களில் ஒருவனாய் அவன் அந்த வீட்டில் அவதரித்திருக்கும்போது, அவனுடைய பிறந்த நாள் அவன் பெற்றோருக்கு ஒரு நல்ல நாள்தானே?

அஷ்ட திக்குப் பாலகர்கள் என்றால், அவனுடன் பிறந்த மற்ற எழுவரின் கதி?-யாருக்குத் தெரியும், 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற நம்பிக்கையில் அவர்களைப் பெற்றவர்களே அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்போது?

கடைசி கடைசியாகத்தான் அருணாசலம் பிறந்தானாம். அவனுக்கு வயது என்ன என்று கேட்டால், அவன் அம்மா சொல்வாள்-'இந்த மாமாங்கம் வந்தால் பன்னிரண்டு' என்று!- அதாவது,