பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்ததும் செய்வதும்

469

பார்க்கும்போது - கிழிந்த ஓலைப் பாய் கிலுகிலுக்க, தலைக்கு அணையாக வைத்துக்கொண்டிருந்த கை வெலவெலக்க, ஆயிரமாயிரம் மூட்டைப் பூச்சிகள் தனக்காக இரவு பூராவும் கண்விழித்திருந்து, தன்னுடன் 'கிச்சு, சிச்சு' மூட்டி விளையாட, சுவர்க்கோழி 'சொய்ங் சொய்ங்' என்று சுருதி கூட்ட, கொசுக்கள் 'நொய்ங், நொய்ங்' என்று நீலாம்பரி வாசிக்க, தான் தூங்கும் அழகும், பொழுது விடிவதற்கு முன்னால் காகமோ, கர்த்தபமோ வந்து தன் வீட்டருகே கத்துவதும், ‘நல்ல சகுனம்' என்று நினைத்துக் கொண்டே தான் எழுந்திருப்பதும், வெளிக்குச் செல்ல ஆற்றங்கரையைத் தேடி 'அநாகரிக'மாக ஓடுவதும், பல்லைத் தேய்க்க வேப்பங் குச்சியை நாடுவதும், பழைய சோற்றுப் பானையைத் திறந்தால், ராத்திரிதான் எங்கிருந்தோ ஒரு விருந்தாளி வந்து தொலைந்தானே, உனக்கு ஏது பழையது. என்று கேட்பது போல அது தன்னைப் பார்த்து வாயைப் பிளப்பதும் ஞாபகத்துக்கு வரும்? அது மட்டுமா? தன்னுடைய உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் சுக்குக் கஷாயத்தோடு சரி; அந்த அபூர்வ மனிதரின் உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டாலோ உள்ளுர் டாக்டர்கள், உள்ளூர் ஆஸ்பத்திரிகளைக்கூட அவர் சீந்துவதில்லை; அமெரிக்காவுக்கும் ஸ்விட்ஜர்லாந்துக்கும் பறக்கிறார்! - இப்படியெல்லாம் இருக்க, வாழ, அவரால் எப்படி முடிகிறது? அதற்காக அவர் என்ன செய்கிறார்? என்னதான் செய்கிறார்.

இந்தக் கேள்வி அவனுடைய உள்ளத்திலிருந்து இன்று நேற்று எழவில்லை; அவனுக்கு உலகம் தெரிந்த நாளிலிருந்தே எழுந்துவிட்டது.

இத்தனைக்கும் அவர் கால் வலிக்கத் துருத்தி ஊதுகிறாரா? கை வலிக்க எதிர் முட்டி அடிக்கிறாரா? உலைக்களத்தில் வேகும் இரும்போடு இரும்பாக வேகிறாரா? உடம்பெல்லாம் கரியைப் பூசிக்கொண்டு, குளிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல் வியர்வையாலேயே அதைத் துடைத்துக் கொள்கிறரா?- இல்லையே?

அவருடைய தகப்பனார் தோட்ட வேலைக்குப் போகிறரா? தாயார் வீடு கூட்டப் போகிறாளா?-இல்லையே?

இவையொன்றும் இல்லையென்றால் அவர் இப்படி யெல்லாம் இருக்க, வாழ என்ன செய்தார்? என்னதான் செய்தார்?