பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரு பேரப்பிள்ளைகள்

"பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா? -சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா?" என்று வழக்கம்போல் அலுத்துக்கொண்டபடி, ஒளியிழந்த கண்களுக்குத் தன் கையால் ஒளியைத் தேக்கிக் கொடுத்துக் கொண்டே திண்ணைக்கு வந்தார் பெரியண்ணா.

அப்போது, "என்ன பெரியவரே, சௌக்கியமா?" என்று கேட்டுக்கொண்டே வந்தார் எதிர் வீட்டுச் சின்னண்ணா.

சின்னண்ணாவும் அப்படி யொன்றும் சிறியவரல்ல; அவரும் பெரியவரே. ஆனாலும் அந்தப் 'பிள்ளைக் குறும்பு' இன்னும் அவரை விட்டபாடில்லை!

"என்னமோ, இருக்கிறேன்!" என்றார் பெரியண்ணா, தான் இருப்பதையே ஒரு பெரிய குற்றமாகக் கருதுபவர்போல்.

"வர்கள்தான் என்ன செய்வார்கள், பாவம்! வாலிபத்தில் அவர்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு மனைவிமார்கள்; அந்த மனைவிமார்களை மஞ்சள் - குங்குமத்தோடு அனுப்பி வைத்துவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்த இரண்டாவது பொழுது போக்கோ தொணதொணப்பு!-அந்தத் தொணதொணப்புக்கு இந்த 'ராக்கெட் யுக'த்தில் யார் அவ்வளவு எளிதில் இரையாகிறேன் என்கிறார்கள்? அப்படியே ஒரிருவர் இரையாகக் கிடைத்தாலும் 'படம் கொண்ட பாம்பின் வாயில் பற்றிய தேரைபோ'லல்லவா அவர்கள் விழிக்க 'ஆரம்பித்து விடுகிறார்கள்!

அதற்காக அவர்கள் இருவரும் அயர்ந்து போய் விடுவதும் இல்லை; தங்களுடைய தொணதொணப்புக்கு வேறு யாரும் இரையாகவில்லையென்றால், அவர்களே ஒருவருக்கொருவர் இரையாகிக் கொண்டு விடுவார்கள்!

ஆம், அவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் அவர் இவரைத் தேடிக்கொண்டு வந்து விடுவார்; இவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் இவர் அவரைத் தேடிக்கொண்டு போய்விடுவார் அன்றைய சந்திப்புக்கும் அதுவே காரணம்!