பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பணமே! அன்புக்கும் அதுவே ஆதாரம்


"அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!"

என்று நம் அமரக வி பாரதியார் பாடியிருக்கிறார் அல்லவா? - அந்த அமர வாக்கை யார் காப்பாற்றினாலும் காப்பாற்றாவிட்டாலும், நாமாவது காப்பாற்றுவோமே என்ற திடசங்கல்பம் போலிருக்கிறது அவர்களுக்கு. இல்லாவிட்டால் ஆற்றங்கரை யோரத்தை ஒட்டினாற்போல் இருக்கும் அந்தப் பள்ளத்தாக்கில் - அடிக்கடி பெருகி வரும் வெள்ளம், நகரத்தை அழகுபடுத்த வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் அவர்களுடைய குடிசைகளைப் பிய்த்து எறிந்து, அவர்களைப் பாடாய்ப் படுத்த வரும் நகராண்மைக் கழகத்தார், அடுத்தாற்போல் இருக்கும் சுடுகாட்டில் எரியும் பிணங்களிலிருந்து வரும் துர்நாற்றம், அந்தச் சுடுகாட்டுக்கு எதிர்த்தாற்போல் அமைந்திருக்கும் நாய்களின் கொலைக்களத்திலிருந்து கிளம்பும் அலறல், ஓலம்-இவை எதற்கும் அஞ்சாமல் தங்கள் அருமை மனைவிமார், ஆசைக் குழந்தைகள் ஆகியவர்களோடு அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வருவார்களா?

என்ன சொன்னேன், 'வாழ்ந்து வருகிறார்கள்' என்றா சொன்னேன்?-இல்லை, அவர்கள் வாழ்ந்து வரவில்லை - தினசரி இறப்பதும் பிறப்பதுமாயிருந்து வருகிறார்கள்- அதிர்ஷ்டசாலிகள் ஐயா, அதிர்ஷ்டசாலிகள்! நமக்கெல்லாம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை சாவு வந்தால், அவர்களுக்குத் தினம் தினமல்லவா வந்துகொண்டிருக்கிறது!

நகரத்தின் அழகையும், நாகரிகத்தையும் அந்த 'நித்திய கண்ட'ங்கள் காப்பாற்றாவிட்டால் என்ன, அவற்றைக் காப்பாற்றுவதற்கென்றே வழிவழியாக வந்து கொண்டிருக்கும் சிலருடைய பங்களாக்கள் ஆற்றங்கரையின்மேல் அழகான பூங்காக்களுக்கு நடுவே இருந்தன. அந்தப் பங்களாக்களிலுள்ள