பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

விந்தன் கதைகள்

குழந்தைகள் தங்களுடைய விளையாட்டுச் சாமான்களுடன் ஆற்றங்கரைக்கு விளையாட வரும்போதெல்லாம் பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளை அதிசயத்துடன் பார்க்கும்; அதே மாதிரி பள்ளத்தாக்கிலுள்ள குழந்தைகளும் பங்களாக்களிலுள்ள குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் வியப்பே உருவாய்த் தங்களை மறந்து நிற்கும்.

இரண்டும் இரு வேறு உலகங்கள், இரு வேறு துருவங்கள் அல்லவா?-ஒன்றை யொன்று சந்திப்பதே அபூர்வ நிகழ்ச்சிதானே?

ரு நாள் மாலை ஆயா ஒருத்தி ஓர் ஆண் குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டே ஆற்றங்கரைக்கு வந்தாள். அதைப் பார்த்ததும் பள்ளத்தாக்கில் பிறந்த மேனியாய் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தைக்கு-ஆம், தன் மானத்தைத் தானே காத்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றும் வயதை அடையும் வரை அதன் பெற்றோர் அதனுடைய வயிற்றைத் தவிர வேறொன்றையும் கவனிப்பதில்லை; கவனிக்க முடிவதும் இல்லை - என்ன தோன்றிற்றோ என்னமோ, "ச்சு, ஐயோ பாவம்" என்றது அனுதாபத்துடன்.

இதைக் கேட்டதும் வண்டியில் அமர்ந்திருந்த குழந்தை மட்டுமல்ல; அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த ஆயாவும் அதை அதிசயத்துடன் பார்த்தாள்.

"ஏன், பாட்டி! இவன் நொண்டியா, இவனால் நடக்க முடியாதா?"

பள்ளத்தாக்குக் குழந்தையின் அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுப் பங்களாக் குழந்தை சிரித்தது.

"ஏன் சிரிக்கிறாய்?"

"நானா நொண்டி இதோ பார்!" என்று வண்டியை விட்டுக் கீழே குதித்து டக், டக் என்று நடந்து காட்டியது அது.

"உன்னால் நடக்க முடியும்போது உனக்கு ஏன் வண்டி?" என்று கேட்டது இது.

"நடந்தால் கால் வலிக்கும் என்று என் அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்தார்!" என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டே,