பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டு வா, நாயை

481

என்று ஏதாவது ஒன்று இருக்கவேண்டுமல்லவா? அந்தக் குறிக்கோள் அதுவாயிருந்தது, அவருக்கு! - அத்தகைய 'லட்சிய வாதியின் ஆணைப்படி, அன்றிரவும் மணி பத்து என்று தெரிந்ததும் ஆபீஸ் பையன் வழக்கம்போல் அந்த நாயை அவிழ்த்து விட்டுவிட்டு, அணைக்க வேண்டிய விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, அவ்வப்போது தம்மை எதிர்க்கும் மனச்சாட்சியைக் கொல்வதற்காக ஐயா அருந்தும் போதை அவருடைய மண்டைக்கு ஏறிவிட்டதா என்று அப்படியே ஒரு பார்வையும் பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போய் விட்டிருக்கிறான். படுக்க அவன் போன பிறகு அந்தப் 'பத்தினிப் பெண்' வந்திருக்கிறாள்; நாய் குரைத்திருக்கிறது - குரைக்காமல் என்ன செய்யும்?-அன்னியர் யாராவது அகாலத்தில் வந்தால் குரைப்பது அதன் கடமை; அந்தக் கடமையைத் தயவு தாட்சண்யமின்றி அது நிறைவேற்றியிருக்கிறது. மனிதனா, ஆளுக்குத் தகுந்தாற்போல் வேஷம் போட? அதுதான் நாயாச்சே, வேஷம் போட முடியவில்லை அதனால்! எனவே, குரைத்திருக்கிறது. பழம்பெரும் இலக்கியங்களிலும், புராண இதிகாசங்களிலும் ஒரு பெண்ணுக்கு என்னென்னவோ இருக்க வேண்டுமென்று சொல்கிறார்களே, அதெல்லாம் ஒன்றுமில்லாத அந்தப் பெண்மணி-அவற்றுக்கெல்லாம் அஞ்சாத அந்தக் கண்மணி-கேவலம், அந்த நாயின் குரைப்புக்கு அஞ்சி வந்த வழியே திரும்பி விட்டிருக்கிறாள். போதை தெளிந்தபின் ஐயா எழுந்து, அந்த 'எதிர்கால நட்ச’த்திரத்தைத் தேடியிருக்கிறார். அது அங்கே இல்லை - என்ன ஏமாற்றம், எப்படிப்பட்ட ஏமாற்றம்- “டிரைவர்! டிரைவர்!” என்று மேலே இருந்தபடியே கத்தியிருக்கிறார். அவனோ ‘சகவாச தோஷ'த்தின் காரணமாகத் தன் சக்திக்கு ஏற்றாற்போல் கள்ளச் சாராய'த்தை ஒரு கை பார்த்துவிட்டு, தேடிக்கொண்டு போய்விட்டிருக்கிறான், வெளியே!-என்ன செய்வார், முதலாளி? அளவு கடந்த ஆத்திரத்துடன் கீழே வந்து காரைத் தாமே எடுத்திருக்கிறார்; பெட்ரோல் இல்லை - 'முட்டாள்! வரட்டும் அவன், முதல் வேலையாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு மறு வேலை பார்க்கிறேன்!' என்று கருவிக்கொண்டே போய்ப் படுத்திருக்கிறார்!தூக்கம் வருமா?-வரவில்லை!

அவ்வளவுதான்; அடுத்த நாள் வந்தது ஆபத்து! - டிரைவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்; நாயும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டது!

ஆம், யாருக்கு என்ன வேண்டுமானாலும் இடையூறாயிருக்கலாம்; மழை தேடி வரும் பெண்களுக்கு மட்டும் ஒரு சிறு துரும்புகூட இடையூறாயிருக்கக் கூடாது என்பது அவருடைய

வி.க. -31