பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

482

விந்தன் கதைகள்

சித்தாந்தம் - 'அப்படி என்னதான் இருக்கும் அந்தப் பெண்களிடம்?' என்று என்னைக் கேட்கிறீர்களா? -அது எனக்குத் தெரியாது ஐயா, நிச்சயமாகத் தெரியாது!

டிரைவருக்குப் பதிலாக வேறொரு டிரைவரை நியமித்த முதலாளி, நாய்க்குப் பதிலாக வேறொரு நாயை நியமிக்கவில்லை - எப்படி நியமிக்க முடியும்? - மனிதனென்றால் அவனுக்கென்று தனிக் குணம் எதுவும் இல்லை; எப்படி வேண்டுமானாலும் குணம் மாறவும், கூடு விட்டுக் கூடு பாயவும் அவனால் முடியும், நாயால் முடியுமா? -அது தனக்கென்று ஒரு தனிக் குணம் வைத்துக் கொண்டிருக்கிறதே?

ஆகவே நாய்க்குப் பதிலாக ‘அந்தரங்கக் காரிய தரிசி' என்று ஒருவரை அன்றே நியமித்துவிட்டார், அவர்!

'அந்தரங்கக் காரியதரிசி' என்றால் அப்படி இப்படி அந்தரங்கக் காரியதரிசி இல்லை -முதலாளிக்கு 'ஏர்-கண்டிஷன் ரூம்' என்றால் அவருக்கும் ஏர்-கண்டிஷன் ரூம்; முதலாளிக்கு 'ஹெராட்' கார் என்றால் அவருக்கும் ஹெராட் கார்; அவருக்கும் தனி டெலிபோன் - இப்படியாகத்தானே அந்தரங்கக் காரியதரிசியின் அந்தஸ்தை உயர்த்தி, அதன் மூலம் தம்முடைய அந்தஸ்தையும் திடீரென்று உயர்த்திக்கொண்டு விட்டார், முதலாளி.

அவர்தான் என்ன செய்வார், பாவம்!- வேறு எந்த விதத்திலும் தம்முடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முடியாமல் இருக்கும்போது?

அன்றிலிருந்து யார் வந்தாலும் சரி - முதலில் அந்தரங்கக் காரியதரிசியைத்தான் பார்க்க வேண்டும், அவர் வடிகட்டி விட்ட பிறகே வந்தவர்கள் முதலாளியைப் பார்க்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று.

இதனால் தமக்கு வேண்டியவர்கள் மட்டுமே தம்மைச் சந்திக்கவும், வேண்டாதவர்கள் சந்திக்க முடியாமல் திரும்பி, 'அடேயப்பா! அவரைப் பார்ப்பதென்றால் அவ்வளவு லேசா? கடவுளைப் பார்த்தாலும் பார்த்துவிடலாம்; அவரைப் பார்க்கவே முடியாது போலிருக்கிறதே?' என்று தமக்காகக் கடவுளைக்கூட ஒரு படி கீழே இறக்கி விட்டுவிடவும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு!

கிடைக்கட்டும்; வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக, "கொண்டு வா, நாயை!" என்று திடீரென்று சொன்னால், எங்கிருந்து கொண்டு வருவேன்?