பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரு திருடர்கள்


ன்று ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்து மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் மாந்தோப்புக்குப் போய்விட வேண்டும் என்று நேற்றே சொல்லி வைத்த பீட்டரை இன்னும் காணோமே? என்ற ஏமாற்றம் இன்னொரு பக்கம் - இவையிரண்டுக்கும் இடையே தவித்தபடி, அவன் வரும் வழி மேல் விழி வைத்துக்கொண்டிருந்தான் டேவிட்.

அவனைக் காணவில்லை; காணவேயில்லை.

தன் வீட்டுக்கு நேர் எதிரேயிருந்த மாதா கோவிலின் மணிக் கூண்டைப் பார்த்தான் டேவிட், மணி இரண்டு!

காவற்காரன் சாப்பாட்டுக்குப் போயிருக்கும் சமயத்திலல்லவா அவன் கை வரிசையைக் காட்ட வேண்டுமென்று சொன்னான்? அவன்கூட இந்நேரம் திரும்பி வந்திருப்பான் போலிருக்கிறதே?

எங்கே போயிருப்பான்? - வேறு எங்கே போயிருக்கப் போகிறான்? - கடற்கரைக்குத்தான் போயிருக்க வேண்டும், காற்றாடி விட! இனி தாமதிப்பதில் பிரயோசனமில்லை -ஆம், இனி தாமதிப்பதில் பிரயோசனமே இல்லை! - இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் அவன் கடற்கரையை நோக்கி எடுத்தான் ஓட்டம்; அங்கே.....

டேவிட் நினைத்தது நினைத்தபடியே காற்றாடிதான் விட்டுக் கொண்டிருந்தான் பீட்டர்!

அதிலும் சும்மாவா? -இல்லை ; ‘டீல்' விட்டுக் கொண்டிருந்தான்!

'மாஞ்சா போடுவதில் மகா சூரனான மஸ்தான் காற்றாடியுடனல்லவா இவனுடைய காற்றாடி மோதிக்கொண்டிருக்கிறது? அவனுடைய காற்றாடியையாவது, இவனுடைய காற்றாடி அறுப்பதாவது?

நடக்காத காரியம்; அப்படியே நடப்பதாயிருந்தாலும் அதுவரை தான் இங்கே காத்திருப்பது முடியாத காரியம்!

ஓ! 'வஜ்ஜிர மாஞ்சா போட்டிருக்கிறாரா, இவர்? அதனால்தான் எதிரி எந்த மாஞ்சா போட்டிருந்தாலும் ஓரிரு முறை அறுத்தெறிந்துவிடலாம் என்ற தைரியத்தில் இவர்பாட்டுக்கு நூலை 'மடமட' வென்று விட்டுக்கொண்டே இருக்கிறார்!