பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



490

விந்தன் கதைகள்

கொடுத்தான்?" என்று அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்டார் மாணிக்கவாசகம்.

"இல்லை; நானேதான் திருடினேன்!" என்றான் பீட்டர், பொய் சொல்லத் தெரியாமல்!

"எனக்குத் தெரியும் தம்பி, எனக்குத் தெரியும்; 'நண்பனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது' என்பதற்காக நீ பொய் சொல்கிறாய்!-அப்படித்தானே?" என்றார் அவர், மேலும் சிரித்துக்கொண்டே.

"இல்லை; நான் பொய் சொல்லவில்லை!" என்றான் அவன் மீண்டும்.

"தம்பியின் வாய் 'பொய் சொல்லவில்லை' என்றும் சொன்னாலும் முகம் 'பொய்தான் சொல்கிறேன்' என்று சொல்லாமல் சொல்கிறதே!" என்றான் காவற்காரன், எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவன்போல.

"இந்தமாதிரிப் பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கெடுக்கும் அந்தத் திருட்டுப் பயல் மட்டும் கிடைத்திருந்தால் அவனை நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா? இங்கே கட்டி வைத்து அடிப்பதோடு, போலீஸாரிடமும் ஒப்படைத்திருப்பேன்!"

"கிடைக்காமலா போய்விடப் போகிறான்? இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கிடைக்காமலா போய்விடப் போகிறான்?"

"அந்தத் தறுதலையை விட்டுவிட்டு நீ இந்தத் தம்பியை அவமானப் படுத்தலாமா?-கேள்; தம்பியிடம் மன்னிப்புக் கேள்!" என்றார் மாணிக்கவாசகம்.

"ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன்; என்னை மன்னித்துவிடு, தம்பி!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான் காவற்காரன்.

பீட்டர் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பி வைத்துக்கொண்டு, "காதில் விழவில்லை!" என்றான் குறுநகையுடன்.

"ஏது, தம்பி பொல்லாத தம்பியாயிருக்கும் போலிருக்கிறதே?" என்று காவற்காரன் மீண்டும் ஒரு முறை அவன் 'காதில் விழும்படி’ தன் கன்னத்தில் 'பட், பட்' என்று போட்டுக்கொண்டான்!