பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஊமைப் பட்டாசு

தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே 'கங்கா ஸ்நான'த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்து, தெரு முழுவதும் விரவிக் கிடந்தன. யாரோஒரு சிறுவன்-வயது பத்துப் பன்னிரண்டுக்கு மேல் ஆகியுங்கூட அறையில் கோவணத்தைத் தவிர வேறொன்றும் அணியாத, அணிய முடியாத சிறுவன் கோழி குப்பையைக் கிளறுவதுபோல அந்தக் குப்பைகளைக் காலால் கிளறுவதும், வெடிக்காத பட்டாசு ஏதாவது கிடைத்தால் அதைக் குதூகலத்துடன் கையில் வைத்துக் கொள்வதுமாக அந்தத் தெரு வழியே வந்துகொண்டிருந்தான். ஆண்டவனைப் போல அவனும் ஒருவேளை அனாதையாயிருக்கலாம். அதற்காகத் தீபாவளியை முன்னிட்டு ஆண்டவனுக்கு என்னவெல்லாமோ செய்து வைத்துப் படைக்கிறார்களே, அதே மாதிரி அவனுக்கும் யாராவது ஏதாவது செய்து வைத்துப் படைக்கப் போகிறார்களா, என்ன? அப்படியே படைத்தாலும் இந்தச் 'சாப்பிடும் சாமி', 'அந்தச் சாப்பிடாத சாமி'யைப்போலப் படைத்ததையெல்லாம் படைத்தவர்களுக்காகவே விட்டு வைக்கப் போகிறதா, என்ன?

சரி, படைக்காவிட்டால் போகட்டும்; வீதியில் வீசி எறியும் எச்சில் இலைகளிலாவது ஏதாவது மிச்சம் மீதி-ஊஹாம், சுதந்திரம் வந்தாலும் வந்தது; அந்தப் பேச்சே கிடையாது!-எல்லாம் தான் தாறுமாறாக விலை ஏறிவிட்டதே, யார் மிச்சம் மீதி வைக்கிறார்கள்? ஏதோ ஞாபகமாக எச்சில் இலைகளையாவது வெளியே கொண்டு வந்து போடுகிறார்களே, அது போதாதா?

போதும்; 'மேல் தீனி' வேண்டித் திரியும் மாட்டுக்கு வேண்டுமானால் அது போதும். ஆனால் மனிதனுக்கு?-காசில்லாமல் இவ்வளவு பெரிய உலகத்தில் கிடைக்கக் கூடியவை இரண்டு. ஒன்று தண்ணிர்; இன்னொன்று காற்று-இவற்றை மட்டுமே கொண்டு மனிதன் உயிர் வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

ஆரம்பப்பள்ளி ஆசிரியன் என்ற முறையில் மற்றவர்களுக்குக் கிட்டாத ஒர் அனுபவம் அடியேனுக்குக் கிட்டிற்று. அதாவது, இந்த 'மதிய உணவுத் திட்டம்' என்று ஒரு திட்டம் வந்திருக்கிறதே, அந்தத்