பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

விந்தன் கதைகள்

அணைத்த பின்சிலசமயம் ஆத்திரம் பற்றிக் கொண்டு வருவதும் உண்டு, அவளுக்கு. 'அவன் ஏன் இன்னும் இங்கே வந்து தொலைகிறான்? எதற்காக என்னை இப்படி வதைக்கிறான்?' என்றெல்லாம் நினைப்பாள்; 'இன்னொரு முறை வந்தால், இங்கே வராதே என்று சொல்லிவிட வேண்டும்; வந்தால் அவரிடம் சொல்லிவிடுவேன் என்று அவனைப் பயமுறுத்த வேண்டும்' என்றெல்லாம் தீர்மானிப்பாள். ஆனால் அவன் வந்து நின்றதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, “எங்கே வந்தாய்?" என்ற அதே அசட்டுக் கேள்வியைத்தான் அவளும் கேட்பாள்; “ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்ற அதே அசட்டுப் பதிலைத்தான் அவனும் சொல்வான்.

எல்லாம் வாசலோடு சரி; உள்ளே அவன் ஓர் அடிகூட எடுத்து வைப்பது கிடையாது.

ஒரு நாள் தற்செயலாக அவனைப் பார்த்து விட்ட ஆலாலசுந்தரம், "யார், அது?" என்று கேட்டார், அமுதாவை நோக்கி.

"எங்கள் ஊர்ப் பையன்!” என்றாள் அவள், அவரை ஏமாற்றுவதோடு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு விடலாம் என்ற நினைப்பிலே.

"ஊர்ப் பையனாயிருந்தால் வாசலோடு அவனை நிற்க வைப்பானேன்? உள்ளே வந்து உட்காரச் சொல்கிறதுதானே? என்றார் அவர், ஏமாந்தும் ஏமாறாமல்.

"வா உள்ளே வா!" என்றாள்.அவள், அவருக்காக,

அவன் வரவில்லை; "ஊஹூம்" என்று தலையை ஆட்டிவிட்டு, அவன்பாட்டுக்குப் போய்விட்டான்.

"ஏன் அவன் உள்ளே வரவில்லை?" என்று கேட்டார்.அவர்.

"அவன் ஒரு மாதிரி!” என்று சொல்லி, அவரிடமிருந்து தப்பப் பார்த்தாள் அவள்.

அவர் விடவில்லை; “ஒரு மாதிரி என்றால் பைத்தியமா?" என்று தொடர்ந்தார்.

"அப்படித்தான் தோன்றுகிறது!" என்று பட்டும் படாமல் சொல்லிவிட்டு, அவள் மெல்ல நழுவப் பார்த்தாள்.