பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

விந்தன் கதைகள்

இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது அவள் எவ்வளவோ கோபத்துடன்தான் படித்தாள்; ஆனால் படித்து முடித்ததும் அவளுக்கு வந்ததோ, சிரிப்பு!

நல்ல பிள்ளைதான், போ!-ஏதாவது ஓர் ஓட்டல் அறைக்கு, இல்லாவிட்டால் ஒரு 'மாட்டினி ஷோவுக்கு, அதுவும் இல்லாவிட்டால் கடற்கரைக்கு அல்லவா அழைப்பான் இந்தக் காலத்துக் காதலன், காதலியை? இவன் என்னடா என்றால் கோயிலுக்கு அழைக்கிறானே, கோயிலுக்கு!

அதுவும் எதற்காம்?-அங்கே ஏதாவது ஒரு பாழடைந்த மண்டபத்தைத் தேடவா என்றால், அதுவும் இல்லையாம்; அர்ச்சனைக்காம்!

அட, பாவி! நிஜமாகவே நீ அவளைக் காதலிக்கிறயா, என்ன?

இல்லாவிட்டால் 'முடியுமானால்' என்றொரு வார்த்தையை வேறு நீ உன்னுடைய கடிதத்தில் சேர்த்திருப்பாயா? 'வராவிட்டால் உயிரை விட்டு விடுவேன்' என்று கடிதத்துக்குக் கடிதம் பயமுறுத்தி, கடைசியில் அவள் உயிரை விடும் அளவுக்கு அல்லவா நீ அவளைக் கொண்டுபோய் விட்டிருப்பாய்?

அதிலும், இன்று நேற்று நீ அவளைக் காதலித்தவனாகவும் தெரியவில்லை; சென்ற வருடத்திலிருந்தே காதலித்து வந்திருக்கிறாய்!- அப்படியிருந்தும், இன்றுவரை 'கன்னி'யாக விட்டு வைத்திருப்பதற்காகவே அவளை நான் உனக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிடலாம் போலிருக்கிறதே?

ஆனால், அவளுடைய அப்பாவுக்கு?- ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாக ஏறி இறங்க வேண்டும்; 'இருபதினாயிரம் ரூபாயாவது எண்ணி வைத்துவிட வேண்டும்' என்று பிள்ளையைப் பெற்றவர் சொன்னால், 'எண்ணாமல் வைத்தால் எடுத்துக் கொள்ள மாட்டீர்களோ?' என்று பெண்ணைப் பெற்றவர் கேட்கவேண்டும். 'பையன் அமெரிக்காவுக்குப் போய் ஏதோ படிக்க வேண்டுமென்று சொல்கிறான்; அதற்காகும் செலவை உம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமோ?' என்று அவர் கேட்டால், 'அப்போதே சொல்லியிருக்கக் கூடாதா? அட்சராப்பியாசத்திலிருந்து ஆன செலவுகளைக்கூட அடியேனே ஏற்றுக்கொண்டிருப்பேன்!' என்று இவர் சொல்லவேண்டும். 'நகை மட்டும் ஐம்பது பவுன்களுக்குக்