பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



502

விந்தன் கதைகள்

எடுத்த எடுப்பிலேயே அவனைப் பிடித்துப் போய் விட்டது அவளுக்கு. எனவே, மானசீகமாக அவர்களை ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பினாள்.

இதெல்லாம் தெரியாத ஆலாலசுந்தரம், ஒரு நாள் தாராவுக்கென்று யாரோ ஒருவனைத் தானே தேடிக்கொண்டு வந்து நின்றபோது, அதையும் சொல்ல முடியாமல் இதையும் ஒப்புக்கொள்ள முடியாமல், “எனக்குக் கல்யாணமே வேண்டாம், அப்பா!" என்றாள் தாரா.

"ஏன்?" என்று கேட்டார் அவர், ஒன்றும் புரியாமல்.

“என்னமோ பிடிக்கவில்லை!"

"பிடிக்கவில்லையாவது! எது எது எந்த எந்தக் காலத்தில் நடக்கவேண்டுமோ, அது அது அந்த அந்தக் காலத்தில் நடந்துதானே ஆகவேண்டும்?"

"நடக்காவிட்டால் எது நடந்துவிடும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அது ஒரு நாளும் நடக்காது, அப்பா என்னை நீங்கள் நம்பலாம்!" என்றாள் அவள்.

இதைக் கேட்டதும், 'நல்ல பெண்தான் போ; நீயும் என்னைப்போல் கடைசிவரை கண்ணீர் விட்டே காலத்தைக் கழித்து விடலாம் என்று நினைக்கிறாயா, என்ன?-அதுதான் என் உடம்பில் உயிருள்ளவரை நடக்காது!’ என்று தனக்குத்தானே சூள் கொட்டிக் கொண்டாள் அமுதா.

ஆனால் அடுக்களையை விட்டு அவள் வெளியே வரவில்லை.

அப்பா தொடர்ந்தார்.

"பைத்தியமா, உனக்கு? பையன் 'என்ஜினிரிங் காலே'ஜிலே படித்துக்கொண்டிருக்கிறான்; அவன் அப்பா பிரசித்தி பெற்ற 'பில்டிங் காண்ட்ராக்ட்' ராயிருந்து வருகிறார்; சென்னையிலே மட்டும் அவர்களுக்குச் சொந்தமாக ஐம்பது வீடுகளுக்குமேல் இருக்கின்றனவாம்; அதைத் தவிர அவர்கள் இப்போது இருந்து வரும் பங்களா வேறு ரூபா இரண்டு லட்சத்துக்கு மேல் போகுமாம். நன்னிலத்திலே நாலு வேலி நன்செய் வேறு இருப்பதாகச் சொல்கிறார்கள். புத்தனேரியிலே பத்து வேலி புன்செய் வேறு இருப்பதாகச் சொல்கிறார்கள்......."