பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சாந்தி எங்கே?

505

இப்படி நினைத்ததும் மெல்ல அடிமேல் அடிஎடுத்து வைத்து அடுக்களைக்குச் சென்றாள்; அஞ்சறைப் பெட்டியைத் திறந்து அதுவரைதான் அவருக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த ஐந்நூறு ரூபாயை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள்.

இனி அவர் வெளியே போக வேண்டியதுதான் பாக்கி; வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு போய் அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர் வீடு திரும்புவதற்குள் நாம் திரும்பிவிடலாம்.......

இந்த எண்ணத்துடன் அடிக்கொரு தரம் அவரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்; மனுஷன் அப்படி இப்படி நகருவதாகக் காணோம்.

நல்ல வேளையாக அவருடைய நண்பர் நம்மாழ்வார் வந்து, "உங்களால் ஒரு காரியம் ஆகவேண்டும்; வாருங்கள் போவோம்!" என்று அவரை அங்கிருந்து நகர்த்திக்கொண்டு போனார்.

'அப்பாடா!' என்று ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, அவர் சென்ற அரை மணி நேரத்துக் கெல்லாம் அவளும் கிளம்பினாள். வாங்க வேண்டியவற்றையெல்லாம் அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு போய் அவள் அவர்களுடைய வீட்டுக் கதவைத் தட்டியபோது, வந்து திறந்தது யார் என்கிறீர்கள்?-சாட்சாத் ஆலாலசுந்தரமேதான்!

"வா, வா, பொங்கலுக்கு நான் மட்டும் வந்து மாப்பிள்ளையை அழைத்தால் போதாதென்று நீயும் வந்துவிட்டாயா?-வா வா!" என்றார் அவர்.

அமுதா வாயைத் திறக்கவில்லை; அப்படியே அசந்து போய் நின்றாள்.

மறுநாள் காலை மற்றவர்களைப்போல அமுதாவும் புது மணத்தம்பதிகளுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடிக்கொண் டிருந்தபோது அவன்-'அவள் ஊர்ப்பையன்' வழக்கம்போல் வந்தான்.

“எங்கே வந்தாய்?" என்று கேட்டாள் அவள்.

“ஒன்றுமில்லை; உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது-வந்தேன்; பார்த்தேன்; வருகிறேன்!” என்றான் அவன்.