பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏசு நாதரின் வாக்கு

வழக்கம்போல் காலை எட்டு மணிக்கெல்லாம் தம்முடைய 'நர்ஸிங் ஹோ’மிலிருந்த நோயாளிகளைப் பார்வையிடுவதற்காக ஞானப்பிரகாசம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, "இன்னும் எத்தனை நாட்கள்தான் உங்கள் நர்ஸிங் ஹோமையும் வீட்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள், அவருடைய மனைவி அற்புதம்.

"பொழுது விடிந்தால் இந்தப் பல்லவிதானா?” என்றார் டாக்டர், தம்முடைய வழுக்கைத் தலையைத் தாமே தடவிப் பார்த்து ரசித்தபடி!

"உங்களுக்கென்ன தெரியும்?-நேற்றுக்கூட என்னை ஒரு நோயாளி கேட்டார், 'நீங்கள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வியாதி?’ என்று!" என்றாள் அவள், அங்கிருந்த நோயாளிகளோடு தானும் ஒரு நோயாளியாக இருக்க விரும்பாமல்.

"இவ்வளவுதானே, நாளைக்கே வீட்டை மாற்றி விட்டால் போச்சு!" என்றார் அவர். "இப்படித் தான் உங்கள் அப்பா கண்ணை மூடும் வரை உங்களுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம்!” என்றாள் அவள்.

அவர் விடவில்லை; "இப்படித்தான் என் அம்மா கண்ணை மூடும் வரை என்னுடைய அப்பாவை நச்சரித்துக் கொண்டிருந்தாளாம்!" என்று பதிலுக்குப் பதில் பழி வாங்கிவிட்டுப் படியை விட்டுக் கீழே இறங்கினார்.

"இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!" என்று அலுத்த படி அவள் உள்ளே செல்ல, அவருடைய மகன் அருளானந்தன் வெளியே வந்து, "அப்பாப்பா! உங்கள் 'போர்'டைப் பார்த்தீர்களா, அப்பா? 'டாக்டர் ஞானப் பிரகாசம் 'எம்.பி., பி. எஸ்.' ஸு-க்குக் கீழே 'ஏஜண்ட், எமதர்மராஜன்' என்று யாரோ எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள், அப்பா!" என்றான் கண்களில் குறுநகைதேங்க.

"போடா போக்கிரி, எல்லாம் உன் வேலையாய்த்தான் இருக்கும்!" என்று அவனைச்செல்லமாகக் கடிந்து கொண்டே டாக்டர் ஞானப்பிரகாசம் நர்ஸிங் ஹோமை நோக்கி நடையைக் கட்டினார்.