பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

விந்தன் கதைகள்

டாக்டர் பாக்கியநாதனின் ஒரே மகன் டாக்டர் ஞானப்பிரகாசம். 'கொடுப்பவனாயிரு; வாங்குபவனாயிருக்காதே!’ என்ற ஏசுநாதரின் வாக்கைச் சிரமேற்கொண்டு மிஸ்டர் பாக்கியநாதன் தான் வாழ்ந்து மறைந்ததால் அவருக்குப் பின் அவருடைய வீட்டில் எஞ்சியிருந்ததெல்லாம் புகழ் ஒன்றுதான். அந்தப் புகழுக்கும் ஒர் இழுக்கு இருந்தது.அதாவது, 'டாக்டர் பாக்கியநாதனின் மரணம் இயற்கை மரணம் அல்ல; செயற்கை மரணம்' என்பதே அந்த இழுக்கு!

அவர் என்ன செய்வார், பாவம்!-உலகத்தினிடம் அவர் இரக்கம் காட்டிய அளவுக்கு உலகம் அவரிடம் இரக்கம் காட்டவில்லை. பரோபகாரியாக வாழ்ந்ததின் பலன், கடன்காரர் உருவிலே வந்து அவருடைய கழுத்தை நெரித்தது-ஜப்தி, வாரண்ட் என்று பல ஜபர்தஸ்துகள்; செத்தால் தலை முழுகுவதைத் தவிர வேறொன்றும் செய்ய விரும்பாத உறவினர்கள்; 'நன்றாயிருக்கிறான்' என்று தெரியும் வரை நாய்போல் வளைய வந்து, 'கெட்டுவிட்டான்' என்று தெரிந்ததும் ஒநாய்போல் ஒடி ஒளியும் நண்பர்கள்!-பார்த்தார்; கடைசி நிமிஷத்தில் தம்முடைய மானத்தைக் காத்துக்கொள்ள வழி என்னவென்று பார்த்தார்-ஒரேவழி, பிறருடைய ஏச்சும் பேச்சும் செவி வழி புகுந்து இதயத்தை ஊடுருவாத அந்த ஒரே வழி-தற்கொலை! ஆம், தற்கொலை தான்!-அக்கம் பக்கம் தெரியாமல் அதைச் செய்து கொண்டு, அமைதி கண்டுவிட்டார்.அவர்

இந்தச் சம்பவம் தம்முடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத சம்பவமாயிருந்தாலும், முதலில் தம்மையும் தம் தந்தையின் புகழுக்கு உரியவராக்கிக் கொண்டு விடவேண்டும் என்றுதான் டாக்டர் ஞானப்பிரகாசமும் நினைத்தார். ஆனால் அந்தப் புகழைக் கொண்டு ஒரு கப் காபிகூடச் சாப்பிட முடியாமற் போனதோடு, அவர் கண்ட உலகமும், 'எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்னதருவாய்?' என்பதுபோல் 'ஒன்வே டிராபிக்'காக இருக்கவே, வாழ்க்கையை வரவு-செலவுக் கணக்காக அமைத்துக்கொண்டு, 'இட்டார்க்கு இடு; செத்தார்க்கு அழு!' என்று தம் தந்தைக்கு நேர் விரோதமாக 'அழ ஆரம்பித்துவிட்டார்' அவர்!

இதனால், 'ஏழைகளிடம் இரக்கம் காட்டுவது கூட ஏமாளித்தனம்' என்ற அளவுக்கு அவருடைய ஞானம் பிரகாசமடைந்துவிட்டது!-அடையாதா, ஆதாயம் ஏதாவது கிடைக்குமென்றால், ஆனானப் பட்ட பணக்காரர்களே ஏழைகளாக நடிக்கத் தயாராயிருக்கும்போது?