பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

விந்தன் கதைகள்

"அதோ பார், அதற்கும் ஆபத்து!”

கைலாசம் பார்த்தான்; காண்ட்ராக்டர் கந்தையா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்துக் கொண்டிந்தார்.

“எதற்கு ஆபத்து?”

"பட்டினிச் சுதந்திரத்துக்குத் தான்; அங்கே பறி போய்க் கொண்டிருக்கிறதல்லவா, அது?”

"ஏதோ இன்றாவது போகிறதே, அதைச் சொல்லு வா, நாமும் போய் அந்தச் சுதந்திரத்தைப் பறிகொடுப்போம்!"

இருவரும் சென்று 'க்யூ'வில் நின்றார்கள்.

"இந்த வருஷம் இவருடைய வீட்டில் பறப்பது பட்டுக் கொடி போலிருக்கிறதே?" என்றான் கைலாசம்.

"ஆமாம், ஆமாம். உனக்குத் தெரியுமா. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இவர் மணல் சப்ளை செய்த போது இவருடைய வீட்டில் பறந்தது பருத்திக் கொடி!" என்றான் வைகுந்தன்.

"ஓஹோ இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது செங்கலும் சுண்ணாம்பும் சப்ளை செய்தபோது இவர் அடைந்த அபிவிருத்தியை இது காட்டுகிறது போலிருக்கிறது!”

"ஆமாம், ஆமாம், இது மட்டுமல்ல; இரண்டடுக்கு மாடி நாலடுக்காக மாறி வருவது கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்தி தான்!"

இவருடைய மனைவி 'நடமாடும் பாங்க்'காக மாறி வருவது கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்திதானோ?”

"ஆமாம், ஆமாம், சைக்கிள், மோட்டார் சைக்கிளாக மாறி, மோட்டார்சைக்கிள் காராகவே மாறி விட்டதற்குக் கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்தி தான் காரணம்!"

"ம்! இந்த அபிவிருத்தி என்னுடைய கப்பரையிலும் உன்னுடைய வேலை தேடித் தரும் ஸ்தாபனத்திலும் என்று தான் காணப் போகிறதோ, எனக்குத் தெரியவில்லை!" என்றான் கைலாசம், நீண்ட பெருமூச்சுடன்,