பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருந்திய திருமணம்

519

"ஒன்றுமில்லை; கொட்டாவி விடுகிறேன், விடுகிறேன், விட்டுக் கொண்டே இருக்கிறேன்!”

"ஏன் கொட்டாவி விடவேண்டும்? ஆசிரியர் அறிவழகரை வேண்டுமானால் நானே பார்த்துக் கொள்கிறேன்; அதற்குமேல் ஆகவேண்டிய காரியங்களை நீங்கள் கவனிக்கலாமே?”

"சரி, கவனிக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கிளம்பினார் சிதம்பரம்.

"எங்கே போகிறீர்கள்?" என்றான் சிகாமணி, மறுபடியும் விசுக்கென்று எழுந்து.

"தாலி வாங்க!”

"வேண்டேன் தாலி; பெண்களுக்கு அது வேலி!"

"வேறு என்னதான் செய்ய வேண்டும்? அதையாவது சொல்லேன்!"

"சொல்கிறேன் அப்பா, சொல்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு மிகவும் முக்கியமாக வேண்டியது மைக்!"

"மைக் என்று சொல்லாதே 'ஒலிபரப்பும் கருவி' என்று சொல்லு!"

"வரவேற்கிறேன், அப்பா வரவேற்கிறேன்; தமிழில் உங்களுக்குள்ள ஆர்வத்தை நான் தலைவணங்கி வரவேற்கிறேன். ஒலி பரப்பும் கருவிக்கு அடுத்தாற்போல் என்னுடைய திருமணத்திற்கு வேண்டிய திரைப்பட இசைத் தட்டுக்கள்!"

"ஐயோ, அது வேண்டாண்டா!"

"ஏன் அப்பா?"

"அந்த இசைத்தட்டால் தான் நிலவொளி வீட்டுத் திருமணம் நின்று விட்டதாம்!”

"இசைத் தட்டுக்கும் நிலவொளி வீட்டுத் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்"

"தலைவிக்கு மாலையிடத் தலைவன் எழுந்தபோது "நெனைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு அதனாலேயே முழிக்குதே அம்மா பொண்ணு!"என்ற இசைத்தட்டை ஒலிபரப்பாளர் வைத்து விட்டாராம்; அதைக் கேட்டதும் தலைவி திடுக்கிட்டு விழிக்க, ஐயமுற்ற தலைவன் பைய நழுவி விட்டானாம்!"