பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

540

விந்தன் கதைகள்

அவிழ்த்து விடப்பட்டிருந்தது; அதற்கு அருகே இரண்டு மாடுகள் படுத்தபடி அசை போட்டுக் கொண்டிருந்தன; அந்த மாடுகளுக்குப் பக்கத்தில் இரண்டு கல்லடுப்புகள்; அவற்றில் ஒன்றின் மேல் சோற்றுப் பானை; இன்னொன்றின் மேல் குழம்புச் சட்டி!

'ஆஹா! பச்சைமலை கிராமமே பசி தீர்க்க வந்து விட்டது போலல்லவா இருக்கிறது!'

இந்த எண்ணத்தில் தன்னை மறந்து நின்ற அவனைப் பிடித்து உலுக்கி, "என்ன யோசிக்கிறீர்கள்? நாம் வரும் போது இங்கே ஒன்றும் இல்லையே என்று யோசிக்கிறீர்களா?" என்றான் கோவணாண்டி.

"ஆமாம் நீங்கள் எப்போது வந்தீர்கள்?"

"நான் காலையிலேயே வந்துவிட்டேன்; இந்த வைக்கோலை விற்றுத் தீர்க்கும்வரை இங்கே தான் தங்கியிருப்பேன்" என்றான் அவன், தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக!

"வந்த இடத்தில் எங்களை விருந்துக்கு அழைக்கிறீர்களே, நாளைக் காலையில் உங்களுக்குப் பழையது இல்லாமற் போய்விடுமே?" என்றான் கண்ணாயிரம் கொஞ்சம் தயக்கத்துடன்.

"நாளையைப் பற்றிக் கவலைப்பட நாம் யார்? கடவுள் இருக்கிறார், கொடுக்க; நாம் இருக்கிறோம், சாப்பிட! ம், பிடியுங்கள்; எப்பொழுது சாப்பிட்டதோ என்னமோ?" என்றான் அவன் மீண்டும் குடுவையை நீட்டி.

அதை வாங்கி இருவரும் கையை அலம்பிக் கொண்டதும் "உட்காருங்கள்! என் தம்பி இதோ இலை வாங்கிக் கொண்டு வந்து விடுவான்!" என்று அவர்களை உட்கார வைத்து விட்டுச் சோற்றையும் குழம்பையும் கொண்டு வந்து அவர்களுக்கு எதிரே வைத்தான் கோவணாண்டி. அதற்குள் இலை வந்து சேர்ந்தது; நாட்டு வளப்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே நாகரிகம் தெரியாத அந்த நாலு ஜீவன்களும் சாப்பிட்டு முடித்தன.

படுக்கத் துண்டை விரிக்கும் போது "ஏன், அப்பா? அந்த வண்டிக்காரர் எவ்வளவு தூரம் படித்திருப்பார்?" என்றான் முருகையன்.

"நான் எவ்வளவு தூரம் படித்திருக்கிறோனோ, அவ்வளவு தூரம்தான் அவரும் படித்திருப்பார்!" என்றான் கண்ணாயிரம்.