பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



546

விந்தன் கதைகள்


"இன்றுதான் கடவுளைக் கண்ணாரக் காண்கின்றேன்; உங்களுக்கு என் நன்றி!”

இதைக் கேட்டதும் "நல்லவேளை எல்லோரும் உங்களைப் போல் இருந்து விட்டால் அந்த ஏழையின் கதி என்ன ஆவது?" என்றாள் திலகம்.

"நான் மட்டும் சும்மாவா இருந்து விடப்போகிறேன்!” என்றார் தியாகி தீனதயாளர்.

"வேறு என்ன செய்யப் போகிறீர்கள், சட்ட சபையில் கேள்வி கேட்பதைத் தவிர!” என்றாள் அவள்.

"அதை இப்போது சொல்வானேன்? நாளைக்குப் பார் பத்திரிக்கையை!” என்றார் அவர்.

மறுநாள் காலை...

"ஆசிரியர்க்குக் கடிதங்கள்" என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவதற்காக 'நகரவாசி' என்ற புனைப்பெயரில் நாளுக்கு நாள் நகரில் பெருகி வரும் வழிப்பறிக் கொள்ளையைப் பற்றியும், அவற்றைத் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாமல் இருக்கும் போலீஸாரின் பொறுப்பற்ற தன்மைகளைப் பற்றியும் காரசாரமாக ஒரு கடிதம் எழுதி எடுத்துக் கொண்டு, அதைத் தபாலில் சேர்ப்பதற்காக டிரைவரைத் தேடிக் கொண்டு கீழே இறங்கி வந்தார் தீனதயாளர்.

'ஷெட்'டில் கார் இருந்தது; டிரைவர் இல்லை.

"கோபாலா, கோபாலா!"

எத்தனை குரல் கொடுத்துத் தான் என்ன பயன்? காணோம்; கோபாலனைக் காணவே காணோம்.

"பொழுது விடிந்ததோ இல்லையோ, டீ குடிக்கப் போய் விட்டான் போலிருக்கிறது, துரை!" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார்.

வாசலில் அவர் கண்ட காட்சி...

"அட பாவி, அந்த மூன்றவாது மனிதன் நீதானா?”