பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

விந்தன் கதைகள்

இத்தனை விஷயங்களில் கொடுத்து வைத்திருந்த வாத்தியார், ஒரே விஷயத்தில் மட்டும் ஏனோ கொடுத்து வைக்கவில்லை. அதாவது அவருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளும் உயிரோடு இருக்கவில்லை. என்ன இருந்தாலும் கடவுள் கருணையுள்ளவரல்லவா? அவற்றில் ஆறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டார். நான்காவதாகப் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும் தான் அவருக்கு இருந்தது. அதற்கு இப்போது ஆறாவது வயது நடந்து கொண்டிருக்கிறது. ஆக எட்டு ஜீவன்களும் வாத்தியார் வைத்தியலிங்கத்தின் வரும்படியை எதிர்பார்த்துத் தங்கள் காலத்தைக் கழித்து வந்தன.

இந்த லட்சணத்தில்தான் தன்னுடைய ஏக புத்திரஜயசந்திரனுக்கு நல்ல முறையில் அக்ஷராப்பியாசம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினாள் மங்களம். அதற்கேற்றாற்போல், அடுத்த தெருவில் வசிக்கும் அழகிரிசாமி என்பவன் - சின்னஞ் சிறு வயதில் வைத்தியலிங்கம் வாத்தியாரிடம் கல்வி கற்றவன் - அன்று கையில் அக்ஷராப்பியாசப் பத்திரிக்கையுடன் அவர்கள் வீட்டைத் தேடி வந்தான்.

"வாடா, வா! என்ன விசேஷம்?"என்று வாத்சல்யத்துடன் அவனை வரவேற்றார் வைத்தியலிங்கம்.

"குழந்தை குமரேசனுக்கு அடுத்த வாரம் அக்ஷராப்பியாசம், அழைப்பிதழ் வைத்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்"என்று சொல்லிக் கொண்டே, ஒரு பத்திரிக்கையை எடுத்து அவரிடம் நீட்டினான் அழகிரிசாமி.

"ரொம்ப சந்தோஷம்!" என்று அதை வாங்கிக் கொண்டார் வாத்தியார்.

“என்னமோ, எல்லாம் உங்க புண்ணியந்தான்! அன்று நீங்கள் என்னைத் தெருத் தெருவாகத் தேடியலைந்து இழுத்துக் கொண்டு போய் அத்தனை அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்திராவிட்டால் இன்று நான் எப்படி இருந்திருப்பேனோ?”

"என் புண்ணியமென்ன, புண்ணியம்? எல்லாம் கடவுளின் கிருபை என்று சொல்லு!"

"அப்படிச் சொல்லிவிட முடியுமா? எனக்குத் தெரிந்த கடவுள் நீங்கள்தான்! - எது எப்படியானாலும் குழந்தையின் அக்ஷராப்பியாசத்திற்கு நீங்கள் அவசியம் வரவேணும். அவனையும் உங்கள்