பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

572

விந்தன் கதைகள்

வேண்டாம் என்கிறீரே, நீர்?" என்று சொல்லிக் கொண்டே, கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து நோக்கித் திரும்பியது, லாரி நம்பர் 3636.

"அதற்கு தான் என்ன செய்வேன்? எதனால் வயிறு நிறையுமோ, அதைத் தான் என் காது கேட்க விரும்புகிறது!" என்றது கைவண்டி.

"உலகத்தில் அதைத் தவிர வேறொரு இன்பமும் இல்லையா?" என்று கேட்டது 4545.

"இருக்கிறது, உங்களுக்காக!" என்றது கைவண்டி, ஆத்திரத்துடன்.

"நீலவான், நெடுங்கடல், தென்றல், தேனருவி, வட்டநிலா, விண்மீன் ஆகியவை கூடவா எங்களுக்காக இருக்கின்றன?"

"இருக்கும், அவை உங்களுடைய சிருஷ்டிகளாக இருந் திருந்தால்!" என்று ஒரு போடு போட்டது கைவண்டி.

"இருக்காது! அவையும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, உம்மைப் போன்றவர்களுக்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கும்!" என்று அது போட்ட போட்டையே திருப்பிப் போட்டது, லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.

"விற்பார்கள், விற்பார்கள்; ஏன் விற்கமாட்டார்கள் ஒரு காலத்தில் மனிதர்களையே சந்தைக்குக் கொண்டு வந்து விலை கூறி விற்றுக் கொண்டிருந்தவர்கள் தானே இவர்கள் ஆனால்..."

கைவண்டி முடிக்கவில்லை; கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து தொடர்ந்தது:

"என்ன ஆனால்?"

"இனியும் நாங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கப் போவதில்லை; நீலவானையும் நெடுங்கடலையும் காட்டி நீங்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்க!"

"பொறும் வண்டியப்பரே, பொறும். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவதற்குள்..."

"நாங்களே முடிந்தாலும் முடிந்து விடுவோம்; நீர் போய் வாரும்!" என்றது கைவண்டி அலுப்புடன்.

"இழக்காதீர்! நம்பிக்கையூட்டும் இலக்கியங்களைப் படிக்காதவரே, படிக்க முடியாதவரே, நம்பிக்கையை இழக்காதீர்"