பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குப்பையிலே குருக்கத்தி

575

இனி யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது! என்று தன்னால் முடிந்தவரை கத்த வேண்டும் - உணர்ச்சியை வெளிப்படுத்தத்தான்.

இந்தக் காட்சி பதிவாக ஒளியும் ஒலியும் தயாரானதும், "கமான், ரிஹர்ஸல்!" என்றார் டைக்ரடர்.

இதை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த அமர்நாத், அதுதான் சமயமென்று அவளைக் கட்டிப் பிடித்து 'நறுக்' கென்று கிள்ளி விட்டான். அத்துடன் அவன் நிற்கவில்லை ; அதன் பலாபலனை வேறு அவள் முகத்திலே நேருக்கு நேராகப் பார்க்க ஆரம்பித்து விட்டான்!

அவளோ வலி தாங்காமல், 'சூசூ ' என்று 'சூ'கொட்டிக் கொண்டே.. அவன் பிடியிலிருந்து மெள்ள நழுவினாள்.

"என்ன, என்ன?" என்றார் டைரக்டர் பதட்டத்துடன்.

"ஒன்றுமில்லை; எறும்பு, கட்டெறும்பு!" என்று தடுமாறினான் அமர்நாத்.

"என்ன கட்டெறும்புக்கு?"

"ஒன்றுமில்லை - கடித்துவிட்டது!"

"ஓ, தீபாவைக் கட்டெறும்பு கடித்து விட்டது என்கிறீர்களா? கடிக்கும், கடிக்கும் நம் கதாநாயகியைக் கண்டால் யாருக்குத்தான் கடிக்கத்தோன்றாது?" - என்றார் டைரக்டர் அவளையும் அவள் அழகையும் பாராட்டும் நோக்கத்துடன்.

இந்தப் பாராட்டு இத்துடன் நிற்க வேண்டுமே என்ற கவலையில் "நான் ரெடி ஸார்!" என்றாள் தீபா.

"எஸ், ஒன்ஸ் அகெய்ன்!" என்றார் டைரக்டர்.

"காரியம் கைகூடும் போலிருக்கிறதே!" என்ற நம்பிக்கையுடன் இம்முறை இன்னும் கொஞ்சம் தைரியத்துடன் அவளை நெருங்கினான் அமர்நாத். ஒத்திகையும் வெற்றிகரமாக முடிந்தது; படப்பிடிப்பும் திருப்திகரமாக இருந்தது.

அன்றிலிருந்து ஏனோ தெரியவில்லை - அவன் கை இட்ட இடந்தனிலே அவளுக்குத் தண்ணென்றிருந்தது; அதில் ஒரு சாந்தியும் பிறந்தது!

அதற்காக - அவனுக்குத் தன்னை அப்படியே அர்ப்பணித்து விட முடியுமா என்ன? அப்படி அர்ப்பணித்து விட்டால் லட்சக் கணக்கான