பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

576

விந்தன் கதைகள்

ரூபாய் வருமானம் 'குளுகுளு' பங்களா, 'ஜிலுஜிலு' கார் - எல்லாவற்றிற்கும் அவனல்லவா அதிகாரியாகி விடுவான்? - அவனுடைய அதிகாரத்துக்குத் தானாவது, கீழ்ப்படியவாவது!

அன்றொரு நாள் அவனைச் சோதித்துப் பார்த்ததிலிருந்தே இது தெரிந்து விடவில்லை? 'இந்தக் கூஜாவைக் கொண்டு போய்க் காரில் வைக்கிறீர்களா?' என்றதற்கு "ஆஹா, அதற்கென்ன?" என்று எதிர்த்தாற் போலிருந்த 'லைட் பா'யை அல்லவா அவன் கூப்பிட்டான்? - அவனாவது, தன் முகம் கோணாமல் நடப்பதாவது!

வேண்டாம்; காதலும் வேண்டாம்; கல்யாணமும் வேண்டாம். கன்னி; நித்திய கன்னி - ஆம், ஒப்பனைக்காரன் என்று ஒருவன் இந்த உலகத்தில் இருக்கும் வரை!

இந்தத் தீர்மானத்துடன் தீபாவளி மலர்களை மூடி வைத்துவிட்டு அவள் எழுந்த போது "அன்புள்ள தீபாவுக்கு, அன்புடன் அமர்நாத்" என்று எழுதப்பட்ட பெரிய காகிதப் பையொன்றை யாரோ ஒரு சிறுவன் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.

"இதுவும் புடவையாய்த்தான் இருக்கும் போலிருக்கிறது! சரிதான், சரிதான்; இந்தத் தீபாவளிக்கு வரும் புடவைகளைப் பார்த்தால் 'தீபாவளி எம்போரியம்' என்று ஓர் எம்போரியம் வைத்து விடலாம் போலிருக்கிறதே!" என்று சொல்லிக் கொண்டே அதிலிருந்த பட்டுப் புடவையை எடுத்துப் பார்த்து விட்டு செலக்ஷன் நன்றாய்த் தான் இருக்கிறது; இருந்தாலும் நாயுடு கொண்டு வந்து கொடுத்த புடவைக்கு இது ஈடாகுமா?' என்று எண்ணிக் கொண்டே அதைச் சோபாவின் மேல் வீசி எறிந்தாள்.

அதன் மேலிருந்த 'வாசகம்' அப்போது தான் அவள் கண்களைக் கவர்ந்தது!

'அன்புள்ள தீபாவுக்கு, அன்புடன் அமர்நாத்!'

இதைப் படித்ததும் அவள் சிரித்தாள்.

அன்பு -அதைக்கூட ஏதாவது ஒரு காரியத்துக்காகத் தான் செலுத்த முடியும் போலிருக்கிறதே!... ம், இவனைப் போல் எத்தனையோ பைத்தியங்களைப் பார்த்தவள் நான், என்னையா இவனால் பைத்தியமாக்க முடியும்?

அவள் மறுபடியும் சிரித்தாள்.