பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

விந்தன் கதைகள்

கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களிலோ ஒருவர் கூடப் பாக்கி இல்லை; எல்லோரிடமும் வாங்கியாகிவிட்டது. புதிதாக யாரையாவது பிடிக்க வேண்டும். யாரைப் பிடிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சமயத்தில் வந்து நீ என்கழுத்தை அறுக்கிறாயே!” என்று எரிந்து விழுந்தார் வாத்தியார்.

"உங்களுக்கு ஏன் பெண்டாட்டியும் பிள்ளையும் என்று எனக்குத் தெரியவில்லை!" என்றாள் அவள்.

"உனக்கு ஏன் புருஷனும் பிள்ளையும் என்று எனக்கும் தெரியவில்லை!" என்றார் அவர்.

ந்தச்சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியிருக்கும். என்றுமில்லாத திருநாளாய் அன்று வாத்தியார் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே ஆனந்த பரவசத்துடன் வந்தார். இந்தக்கோலத்தில் அவரைக் கண்டதும் மங்களம் "என்ன விசேஷம் ?"என்று உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டேசமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

"ஏதாவது விசேஷம் இல்லாமல் நான் இப்படியிருப்பேனா? நீயுந்தான் இத்தனை வருஷங்களாக என்னுடன் குடித்தனம் செய்துகொண்டு வருகிறாயே, என்னைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாயா? வாழ்க்கையில் என்றைக் காவது ஒரு நாள் நான் சந்தோஷமாயிருக்கிறனென்றால், அன்று எங்கேயாவது பத்தோ, இருபதோ கடன் வாங்கியிருப்பேன்....!"

"பேசுகிறீர்களே, நீங்களும் ஒரு ஆண்பிள்ளை மாதிரி! பையனின் அக்ஷராப்பியாசத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டீர்களாக்கும் என்று நான் கேட்க வந்தால்..."

"கவலைப்படாதே; அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டேன்...."

"என்ன பணத்திற்கா?”

"ஆமாம்; அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்!"

"எவ்வளவு?"

"மாதம் பதினைந்து ரூபாய்!”

"என்ன பிதற்றுகிறீர்? மாதம் பதினைந்து ரூபாய் வாங்கி அக்ஷராப்பியாசம் எப்படிச் செய்வதாம்?"