பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு ரூபாய்

581

நஷ்டக் கணக்குப் போட்டுக் காட்டணும். அது எப்படி, தெரியுமா? தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிகிட்டே, 'நடக்காது, நட டேசனுக்கு! அங்கே போய்க் கேசு எழுதி, நாளைக்குக் காத்தாலே உனக்கு நான் கோர்ட்டுலே அஞ்சு ரூபா அவராதம் போட்டு வைக்கலே, என் பேரு சின்னசாமியில்லே'ன்னு மீசைமேலே சும்மா ஒரு கையைப் போடு! இன்னா, உனக்கு மீசையே இன்னும் சரியா முளைக்கலையா? பரவாயில்லை! அது முளைக்கிற இடத்தைச் சும்மா ஒரு தடவுத் தடவு, போதும்! எல்லாம் உன் அசட்டுத்தனத்தை மறைக்கத்தானே? இப்போ நீ போடாம போட்டுக் காட்டிய கணக்கு அவளுக்கு புரிஞ்சிப்போவும். 'மூணு ரூவாய்க்கு மூணு ரூவாயும் மிச்சம், பேரமும் கெட்டுப் போவாது'ன்னு முழுசா ரெண்டு ரூபா எடுத்துக் கொடுக்க வருவா! அதையும் பேசாம வாங்கிக்கிட்டு வராம 'இன்னிக்கு உன்னைப் போனாப் போவுதுன்னு உடறேன்; நாளைக்கு இங்கேகடை வெச்சே, லாரியைக் கொண்டாந்து, உன்னையும் உன் பழத்தையும் வாரிப் போட்டுக்கிட்டுப் போயிடுவேன்! 'ன்னு சும்மா ஒரு 'உடான்சு' உட்டுட்டு இங்கே வா! அதோ, அந்தச் சந்து முனையிலே இருக்கிற காக்கா ஓட்டலுக்குப் போயி, ஆளுக்கு ரெண்டு சம்சாவை எடுத்துக் கடிச்சி, அதுக்குமேலே டீயும் அடிச்சு, அப்படியே உனக்கொரு பீடிக்கட்டும் எனக்கொரு பீடிக்கட்டும் வாங்கிக்கிட்டு வந்துடுவோம், என்ன செய்யறியா?"

"ஐயையோ, நான் மாட்டேண்ணா ! லஞ்ச ஒழிப்பு அதிகாரிங்க பார்த்தா ..."

"அந்தக் கவலை உனக்கு இன்னாத்துக்கு? அவங்களைப் பார்த்துக்கத்தான் நான் இருக்கேனே, நீ போடா சும்மா!"

"அப்புறம் என்னை வம்புலே மாட்டி வெச்சிடாதே, அண்ணே! நான் பிள்ளை குட்டிக்காரன்...."

"எனக்கு மட்டும் பிள்ளை குட்டி இல்லையா? போடா! அவங்க வந்தா ஏதாச்சும் ஒருசாக்கைவெச்சி நான் விசில் அடிக்கிறேன், அதைக் கேட்டதும் நீ சும்மா ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கம்னு வந்துடு!"

"சும்மா சும்மான்னு என்னைச் சும்மா போகச் சொல்றியே, அதுக்கு நீயேதான் போனா என்னண்ணே?"

"நான் நேத்துத்தாண்டா, அவளை மெரட்டி ரெண்டு ரூவா வாங்கினேன்; அதுக்குத்தான் இன்னிக்கு உன்னைப் போகச் சொல்றேன்!"