பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபீஸாப்பியாசம்

345

"அக்ஷராப்பியாசம் என்னடி, அக்ஷராப்பியாசம்! இதோ பார், அடேய் சுந்தர்! அடேய் சுந்தர்...!

"பையன் வந்தான்; "என்ன அப்பா?"என்று கேட்டான்.

"கோடி வீட்டுக் கோடீஸ்வர ஐயரை உனக்குத் தெரியுமா?"

"தெரியுமே!"

"நாளையிலிருந்து நீ அவருடன் போ! அவர், தம் ஆபீஸில் உனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுப்பார்.என்ன வேலை தெரியுமா? மானேஜர் மேஜையின் மேலிருக்கும் மணி 'டங்’ என்று ஒலித்ததும், அவருக்கு முன்னால் நீ போய் பயபக்தியுடன் நின்று, "ஏன் ஸார்?" என்று கேட்க வேண்டும்; அவர் வருவதற்கு முன்னால் அவருடைய மேஜை, நாற்காலி முதலியவற்றை துடைத்து வைக்க வேண்டும், என்ன தெரிந்ததா?”

"தெரிந்தது அப்பா!"

பையன் போய்விட்டான். அவன் சென்றதும் மங்களம் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு 'இதுதான் அக்ஷராப்பியாசமா? இல்லை, கேட்கிறேன்!” என்று இன்னொரு கையை வாத்தியாருக்கு முன்னால் நீட்டிக் கேட்டாள்.

"யார் சொன்னது? - இது ஆபீஸாப்பியாசண்டி, ஆபீஸாப்பியாசம்"!என்றார் சிரித்துக் கொண்டே.