பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து.....

25 ஜனவரி 1965

பின் இரவு; மணி மூன்று அல்லது மூன்றரைதான் இருக்கும். 'மூன்றாவது ஷிப்ட்' வேலை முடிந்து, நான் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சில்லென்று வீசிய காற்று, பாடாமலே என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தது. 'நடக்கட்டும் நடக்கட்டும், நானும் என் சைக்கிளும் தூக்கத்தில் எங்கேயாவது போய், எதிலாவது முட்டி மோதிக் கொண்டு நொறுங்கும் வரை உன்னுடைய திருவிளையாடல் நடக்கட்டும், நடக்கட்டும்!' என்று நான் விழித்த கண் விழித்தபடி போய்க் கொண்டிருந்தேன்.

மறுநாள் பொழுது விடிந்தால் - விடிந்தால் என்ன, அது தான் விடிந்து விட்டதே! - குடியரசு தினம். முன்னெல்லாம் அதன் கோலாகலம் முதல் நாள் இரவே அங்கங்கே கொஞ்சம் தலை காட்டும்; அதாவது மூவர்ணக் கொடிகள் நிறைந்த தோரணத்தையாவது மக்களில் பலர் தாமாகவே முன் வந்து வீதிக்கு வீதி கட்டிக் கொண்டிருப்பார்கள். இப்போதோ அதுகூட இல்லை; ஆளுங் கட்சிக்காரர்கள் கூட அதற்குரிய காசை வாங்கி, ஆனந்தமாக சினிமாப் பார்த்து விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே! தூங்கட்டும் தூங்கட்டும்; தேர்தலின்போது மட்டும் கொஞ்சம் விழித்துக் கொண்டிருந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது? நினைக்கட்டும்; நினைக்கட்டும்.

எதிர்க்கட்சிக்காரர்களுக்கோ இந்த வருடத்துக் குடியரசு தினம் 'துக்க தின'மாகப் போய்விட்டது. ஆட்சிமொழி இந்தி நாளை அமுலுக்கு வரப்போவதாக அறிவித்திருப்பதால்! எனக்கென்னவோ இது பிடிக்கவில்லை; என்னைப் போன்றவர்களுக்கு எல்லாத் தினமுமே துக்க தினமாக யிருக்கும் போது, நாளை மட்டும் என்ன துக்க தினம் வாழுகிறதாம்?

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே நான் வீட்டை அடைந்தபோது, எனக்காகக் காத்துக் கொண்டிருந்த என் மனைவி கதவைத் திறந்து விட்டு விட்டு எனக்குத் தெரியாமல் எதையோ எடுத்துச் சட்டென்று மறைக்கப் பார்த்தாள்; என்றுமில்லாத அந்த அதிசயத்தைக் கண்டு நான் துணுக்குற்று "என்ன அது?" என்றேன் ஒன்றும் புரியாமல்.

"அதற்குள் பார்த்துவிட்டீர்களா, அதை? ஒன்றுமில்லை, நீங்கள் போய்ப் பேசாமல் தூங்குங்கள்" என்றாள் அவள்.