பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து....

593

அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தோம்.

"சொல்லப் போகிறீர்களா, இல்லையா?" என்றார் அவர் மறுபடியும்.

அதற்கு மேல் அவருடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாமல், "எங்களுக்குத் தெரியாது, ஸார்" என்றார் ஒருவர்.

"தெரியாதா, ஏறு வண்டியில்!" என்று அவருடைய சிண்டைப் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, "உனக்கு?" என்றார் அவர் அடுத்தவரை நோக்கி.

"தெரியாது!" என்று சொல்வதே குற்றமாயிருக்கும் போது அவர் என்ன செய்வார், பாவம்! எப்படியாவது அவரிடமிருந்து தப்ப வேண்டுமே என்பதற்காக 'யார் தூண்டிவிட்டது இவனை? என்றார் அவரும் இன்ஸ்பெக்டரைப் பின்பற்றி.

"என்னையே திருப்பிக் கேட்கிறாயா, ஏறு வண்டியில்!" என்று அவருடைய சிண்டையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, "உனக்கு?" என்றார் இன்ஸ்பெக்டர் அவருக்கு அடுத்தவரை நோக்கி.

'இதென்ன வம்பு!' என்று எண்ணியோ என்னமோ, "இந்த எதிர்க் கட்சிக்காரர்கள்தான் ஸார், இவனைத் தூண்டிவிட்டிருக்க வேண்டும்" என்றார் அவர் கையைப் பிசைந்தபடி.

"அவர்கள்தான் நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை என்று சொல்லிவிட்டார்களே?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"அவர்கள் இல்லையென்றால் வேறு யாராயிருக்கும்? ஒருவேளை சமூக விரோத சக்திகள் ஏதாவது..."

அவர் முடிக்கவில்லை ; அதற்குள் "அந்த சக்தி நீதான்; வண்டியில் ஏறு!" என்று அவருடைய பிடரியையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு "உனக்கு?" என்றார் அவர் அடுத்தாற்போல் இருந்தவரை நோக்கி.

"என்ன சொன்னாலும் இந்தக் கடமை வீரரிடமிருந்து தப்ப முடியாது போலிருக்கிறதே?" என்று நினைத்தோ என்னமோ, "ஆளும் கட்சியின் சோஷலிஸம் பிடிக்காத ஆலை முதலாளிகள்தான் ஸார், இவனைத்தூண்டி விட்டிருக்க வேண்டும்!" என்றார் அவர், தம் இஷ்ட தெய்வத்தை இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல் பிரார்த்தித்துக் கொண்டே.

வி.க.-38