பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

596

விந்தன் கதைகள்

ரொம்பச் சரி......

தமக்குக் குழந்தைகள் யாரும் இல்லாததால், தம் மனைவிக்குப் பிறகு தம்முடைய வீட்டை, இங்கே என்னைப் போன்றவர்களின் உயிரைக் காப்பதில் முனைந்திருக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தாருக்கு நன்கொடையாக வழங்கிவிட வேண்டும்.

ரொம்ப ரொம்பச்சரி...

ஊரிலிருக்கும் ரெண்டு ஏக்கர் நிலம் அம்மாவுக்கு, அதை வைத்துக் கொண்டு அவர்கள் தம் மருமகளிடமே இருந்தாலும் இருக்கலாம்; தம்பியின் வீட்டுக்குப் போனாலும் போகலாம்.

ரொம்ப ரொம்பச்சரி...

ஏறக்குறைய ஓர் உயிலைப் போல் இருக்கும் இந்தக் கடிதத்தை இத்துடன் முடித்திருக்கக் கூடாதோ, அவர்? இதற்குமேல்தான்......

கண்ணராவி, கண்ணராவி!

இதற்குத்தான் செய்து கொண்டிருந்த வேலையைக்கூட விட்டுவிட்டு, "சீனாக்காரனை விரட்டப் போகிறேன்!" என்று அவர் போனாரோ?

கடவுளே! அவருடைய நெற்றிப் பொட்டில் பாய்ந்த குண்டு என்னுடைய நெற்றிப் பொட்டிலும் பாய்ந்திருக்கக் கூடாதா? இப்படி எண்ணிக் கொண்டே அமுதா அடிமேல் அடி வைத்து சாளரத்தை நெருங்கியபோது "என்ன சேதி?" என்பதுபோல் நிலா அவளை எட்டிப் பார்த்தது.

முன்பொரு முறை இதே இடத்தில் இதே போன்றொரு நிலவு நாளில், "அமுதா! இந்த நிலவைப்போல் நானும் என்னுடைய வீரத்தால் உலகத்தில் என்றும் வாழ்வேன்!" என்று அவன் சூள் கொட்டிய விதம், நினைக்க நினைக்க அவள் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. "செத்த பிறகும் தாம் வாழவேண்டுமென்று அன்று நினைத்த புண்ணியாத்மாதான், உயிரோடிருக்கும்போதே இன்று நான் வாழக் கூடாது என்று நினைக்கிறார்! இல்லையென்றால் இந்தக் கடிதத்துக்கு வேறு என்ன அர்த்தமாம்? மோசம், ரொம்ப மோசம்! என்னைப்பற்றி இவ்வளவு இழிவான அபிப்பிராயமா கொண்டிருந்தார் அவர், இத்தனை நாளும்? வரட்டும்; கடவுள் அருளால் உடல் தேறி, உயிரும் தேறி அவர் இங்கே வரட்டும். அதுவரை இந்தக் கடிதம் என்னிடம் இருக்க வேண்டுமா, என்ன? வேண்டாம்; வேண்டவே வேண்டாம்!" என்று அவள் அதைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து கொண்டிருந்தபோது "நல்ல காரியம் செய்தாய் அமுதா, நல்ல காரியம் செய்தாய்!" என்று தன்னை யாரோ