பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

602

விந்தன் கதைகள்

விரட்டுவதற்காக அவன் சீற: எழுந்து சென்ற போது தன் அம்மா மட்டும் தன்னுடைய மனைவிக்குத்துணையிருந்தால் போதாதென்று, கவிஞர் காஞ்சிவாணனையும் அவளுக்குத் துணையாக வைத்து விட்டுப் போவானா?

போனது தான் போனான்; வெற்றியுடன் திரும்பி வீடாவது வந்து சேர்ந்தானா? அதுவும் இல்லை; வீரமரணத்தை எதிர்பார்த்து ராணுவ மருத்துவ மனையில் தவம் கிடக்க ஆரம்பித்துவிட்டான்.

இந்தச் சமயத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன அதிசயம் என்றால், 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பார்களல்லவா? அதற்கு விரோதமாகக் கவிஞர் நடந்து கொண்டதால்தானோ என்னவோ, காத்தாயி கருவுற்றாள். மகப்பேறுக்காகப் பிறத்தகம் போன அவளோ, அந்தப் பேறை அடைவதற்கு முன்னாலேயே கண்ணை மூடிவிட்டாள். இந்தச் செய்தி ஆனந்தனின் காதுக்கு எட்டியதும், அவன் தன் ஆறாத் துயரை வெளியிட்டுக் கவிஞர் காஞ்சிவாணனுக்கு அங்கிருந்தபடியே ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தால் பெற்ற ஆறுதலைவிட, காத்தாயியின் மரணத்தால் பெற்ற ஆறுதல்தான் அவரைப் பொறுத்தவரை அதிகமாயிருந்தது என்றாலும், அந்த ஆறுதலைக் கொண்டு அமுதாவால் இழந்துவிட்ட அமைதியை அவரால் மீண்டும் பெற முடியவில்லை.

அதை எப்படிப் பெறுவது, எந்த வழியில் பெறுவது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போது தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த அந்தக் கடிதம் ஆனந்தனிடமிருந்து அவருக்கு வந்தது.

அதில் அவன் தன் 'சொத்தின் பரிவர்த்தனை'யைப் பற்றி மட்டும் எழுதவில்லை . தன் 'மனைவியின் பரிவர்த்தனை'யைப் பற்றியும் எழுதியிருந்தான். அதாவது, தனக்குப் பிறகு அமுதாவின் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாதென்றும், அரைகுறையான அவளுடைய வாழ்க்கையைப் பரிபூரணமாக்குவதற்காகக் கவிஞர் காஞ்சிவாணன் அவளை மறுமணம் செய்து கொள்ளவேண்டு மென்றும் அதில் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

இதை அவன் அவருக்கு மட்டும் எழுதவில்லை; அவளுக்கும் எழுதியிருந்தான். அதாவது கடிதம் ஒன்று, நகல்கள் இரண்டு - ஒன்று அவருக்கு; இன்னொன்று அவளுக்கு!

ந்த நிலையில் ஒருநாள் இரண்டு நாட்களாயின; ஒரு வாரம் இரண்டு வாரங்களாயின; ஒரு மாதம் இரண்டு மாதங்களாயின.