பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூன்று பொம்மைகள்


"டேய், உன் அப்பாடா!" என்று தன் சகாக்களில் ஒருவன் தன்னை எச்சரித்ததுதான் தாமதம், அதுவரை கோலி விளையாடிக் கொண்டிருந்த குமார், தன் கையிலிருந்த குண்டைக் கீழே விட்டெறிந்துவிட்டு, விட்டான் சவாரி, வீட்டை நோக்கி.

வந்த வேகத்தோடு வேகமாகக் கை கால் முகத்தைக் கழுவிக் கொண்டு, நெற்றியில் மூன்று பட்டை. வீபூதியையும் மறக்காமல் அடித்துக் கொண்டு, புத்தகமும் கையுமாக விளக்கடியில் உட்கார்ந்துவிட்டான், படிக்க!

"காலை எழுந்தவுடன் படிப்பு.....மாலை முழுதும் விளையாட்டு!" என்றுதான் பாரதியார் கூடப் பாடியிருக்கிறார்; இந்த அப்பாவுக்கு என்னடா வென்றால், எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு, படிப்புத்தான்!

இத்தனை மகிழ்ச்சியோடு தொடங்கியதிலிருந்து, தன் கணவர் ஆலாலசுந்தரம் தெரு முனையில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்ட அஞ்சுகம், அடுத்த வீட்டுக்காரியுடன் அளந்து கொண்டிருந்த வம்பை அத்துடன் நிறுத்திக்கொண்டு, அவசரம் அவசரமாக அடுக்களைக்குச் சென்றாள், காபியைப் போட!

இவையனைத்தும் தமக்குத் தெரிந்தும் தெரியாதவர் போல உள்ளே நுழைந்த ஆலாலசுந்தரத்தைப் பார்த்தும் பார்க்காதவன் போல் தன் பாடத்தைப் படிக்கத் தொடங்கினான் பையன்:

"தீயாரைக் காண்பதும் தீதே - திருவற்ற
தீயார் சொல் கேட்பதும் தீதே!
தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே
அவரோடு இணங்கி இருப்பதும் தீது!"

இந்தப் பாட்டைக் கேட்டதுதான் தாமதம், "பலேடா பையா, பலே! நான் இந்தப் பொம்மைகளை வாங்கிக் கொண்டு வந்ததற்கும், நீ அந்தப் பாட்டைப் பாடுவதற்கும் என்ன பொருத்தம், என்ன பொருத்தம்!" என்று சொல்லிக் கொண்டே தம் கையிலிருந்த மூன்று பொம்மைகளை மேசையின் மேல் வரிசையாக வைத்துவிட்டு, "பாரடா, பார்! நீ பாடிய பாட்டுக்கும் நான் வாங்கிக்கொண்டு