பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

விந்தன் கதைகள்

ஆடம்பரமாக தீபாவளி கொண்டாட என்னால் 'அட்வான்ஸ்' கொடுக்க முடியாது!”

"அதற்கு வரவில்லை......"

"பின் எதற்கு வந்தீர்?"

"தீபாவளிக்குத் தீபாவளி ஊர்க்குழந்தைகளுக்கெல்லாம் பட்டாசு வாங்கிக் கொடுப்பீர்களே என்று வந்தேன்!”

"ஒ, அதுவா இதை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா? இந்தாரும், இதை எடுத்துக் கொண்டுபோய் வழக்கம் போல் வாங்கவேண்டிய பட்டாசை வாங்கிக் கொண்டு வாரும்!” என்று நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டினார் துளசிங்கராயர்,

குப்புலிங்கம் அதை வாங்கிக் கொண்டு, “நாளைக்கு ஒருவசவு மிச்சம்!” என்ற மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். அவனுடைய தலை மறைந்ததும் ராயர் கண்களை இறுக மூடிக்கொண்டு, காந்தி மகான் படத்தை நோக்கிக் கை கூப்பிய வண்ணம்,

"வாழ்க நீ எம்மான், இந்த

வையத்து நாட்டிலெல்லாம்......"

என்று வாய்விட்டுப் பாடி, மனம் விட்டுத் துதிக்க ஆரம்பித்துவிட்டார். தெருமுழுவதும் எதிரொலி செய்த அவருடைய குரலைக்கேட்டுக் காந்திஜீயைப் பற்றி நினைக்க நேரமில்லாதவர்கள் கூட நினைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

கான்அப்துல் கபார்கானை 'எல்லைப் புறகாந்தி' என்றால் தோல் மண்டி துளசிங்கராயரை 'எங்கள் ஊர்க்காந்தி’ என்று சொல்ல வேண்டும் அவ்வளவு தூரம் எங்களுடைய அன்புக்குப் பாத்திரமாகியிருந்தார் அவர். அதேமாதிரி நாங்களும் அவருடைய அன்புக்குப் பாத்திரங்களாகியிருந்தோமா என்றால், அதுவேறு விஷயம். அந்த விஷயத்தை விளக்க அவருடைய 'பொன் மொழி' ஒன்றை இங்கே சொன்னால் போதுமென்று நினைக்கின்றேன்:

"ஏழைக்கு என்ன ஐயா, கேடு? அவன் ஓசியிலேயே எவ்வளவு அன்பு வேண்டுமானாலும் காட்டி விடலாம். நான் அன்பு காட்ட வேண்டுமென்றால் காசிலல்லவா கை வைக்க வேண்டியிருக்கிறது"

இந்தப் "பொன் மொழி" எங்களில் சிலருக்குப் 'புன் மொழியாகப் பட்டாலும். அதற்காக எங்களால் அவரைக் கைவிட முடியவில்லை. காரணம், நாங்கள் குடியிருந்த வீடுளெல்லாம் சட்டப்படி-அதாவது, கடவுளுக்கு விரோதமான மனிதனின்