பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈசன் விட்ட வழி

625

குரலிட்டுத் தன் பேரக் குழந்தைகளைக் கூப்பிடுவது பெரியவரின் காதில் விழுந்தது. எதற்காகக் கூப்பிடுகிறாள் அவள், அவர்களை?-ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

அதற்குள், "என்ன, பாட்டி? ஏன் கூப்பிட்டாய், எங்களை?" என்று கேட்டுக் கொண்டே வந்த அவையனைத்தும் அவளைச் சூழ்ந்து கொண்டன. பை நிறைய வாங்கிக் கொண்டு வந்திருந்த பட்டாசுக் கட்டுகளை எடுத்து அவர்களுக்கு முன்னால் வைத்து, "அந்தப் பாவி தான் இருந்த பாடும் இல்லாமல், செத்த பாடும் இல்லாமல் இழுத்துப் பறித்துக்கொண்டு கிடக்கிறானே! தீபாவளியும் அதுவுமாக அவன் உங்களை எப்படி விட்டுவிட்டுப் போவானோ, என்னமோ என்றுதான் இன்றே நான் இந்தப் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு வந்தேன்; எடுத்துக் கொண்டு போய்க் கொளுத்துங்கள்!" என்றாள் பாட்டி.

அவ்வளவுதான்!-அடுத்த நிமிஷம் ‘புஸ்' என்று சீறிப் பொங்கி வழிந்தது பூவாணம்; 'விர்' என்று பறந்து சென்று வெடித்து வீழ்ந்தது வாணவெடி; 'குப், குப்' என்று கொழுந்து விட்டு எரிந்தது மத்தாப்பு; 'கிரு கிரு' என்று சுழன்று சுழன்று வந்தது சங்குச்சக்கரம்; 'டம் டமார்!' என்று வெடித்தது யானை வெடி; 'பட், படார்!' என்று வெடித்தது ஊசி வெடி குழந்தைகளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை ; 'குதி குதி' என்று குதித்துக் கும்மாளம் போட்டன!

ஆயிற்று, பட்டாசும் ஆயிற்று; எல்லோரும் சாப்பிட்டும் ஆயிற்று. இனி தூங்க வேண்டியதுதான் பாக்கி; தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டு விடலாம்........

இப்படி அவர் எண்ணிக் கொண்டிருந்தபோது, "ஏன் அப்பா, நீங்கள் ஒன்றும் சாப்பிடவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே வந்தான் வெங்கடாசலம்.

"கொடு; கடைசியாக உன் கையால் ஏதாவது கொடு" என்று கேட்க வேண்டும்போல் தோன்றிற்று அவருக்கு; ஆனால் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, "எனக்கு ஒன்றும் வேண்டாம்; நீ போய்ப் படுத்துக் கொள்!" என்று சொல்லிவிட்டார். அவனும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த விரும்பாமல் போய்ப் படுத்துக் கொண்டு விட்டான்.

விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு விட்டன; வீட்டை இருள் கவ்விற்று. 'நொய்' என்ற சுவர்க்கோழியின் சத்தத்தையும், 'கொர், கொர்' என்ற குறட்டைச் சத்தத்தையும் தவிர வேறு சத்தம் இல்லை.

அதுதான் சமயம் என்று பெரியவர் எழுந்தார்; 'மீட்டர் போர்'டை நோக்கித் தட்டுத் தடுமாறி நடந்தார்.

வி.க.-40