பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

626

விந்தன் கதைகள்

ஒரு சந்தேகம்; நின்றார்.......

அழைப்பதற்கு முன்னால் சென்றால் ஆண்டவன் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?-அந்தக் கவலை தனக்கு ஏன்? எல்லாவற்றுக்கும் காரணமான அவன்தானே தான் இந்த முடிவுக்கு வருவதற்கும் காரணமாயிருந்திருக்க வேண்டும்? தீர்ந்தது சந்தேகம்; மேலே நடந்தார்.........

‘மீட்டர் போர்டு’ கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கைக்குத் தெரிந்தது. ஆம், தடவிப் பார்த்த கைக்குத்தான்! - அதற்குமேல் யோசிக்கவில்லை அவர்; 'மெயின் ஸ்விட்ச்'சைத் திறந்து, 'ராமா!' என்று ராம நாமத்தை ஜபித்துக் கொண்டே 'டக்'கென்று கையை வைத்துவிட்டார்!

ஆனால் என்ன ஆச்சரியம்! எந்த விதமான 'ஷாக்'கும் அடிக்கவில்லை அவருக்கு. ஒருவேளை 'ஆப்'பாயிருக்குமோ?

வராந்தா விளக்கைப் போட்டுப் பார்த்தார்; எரியவில்லை! அட, கடவுளே! இதற்குத்தானா இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டேன், நான்? - ஏமாற்றத்துடன் திரும்பினார் பெரியவர்!

இருந்தாலும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்று தோன்றிற்று அவருக்கு. தம்முடைய அறையின் விளக்குக் குரிய ‘ஸ்விட்ச்'சைப் போட்டுவிட்டுக் கட்டிலின் மேல் உட்கார்ந்தார். அது எரிந்ததும் தம்முடைய முயற்சியைத் தொடரலாம் என்ற உத்தேசத்துடன்!

ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அது எரியவில்லை ; அதற்குப் பதிலாகத் தம் வாழ்வைத் தாம் முடித்துக் கொள்ளும்வரை எந்தப் பொழுது விடியக் கூடாது என்று அவர் நினைத்தாரோ, அந்தப் பொழுது விடிந்தது; தீபாவளியும் 'வந்தேன், வந்தேன்!' என்று வந்தது.

"அப்பா! சாஸ்திரத்துக்காக ஒரு துளி எண்ணெய் தொட்டுத் தலையில் வைத்துக் கொள்கிறீர்களா?" என்று கேட்டுக்கொண்டே கையில் எண்ணெய் நிரம்பிய கிண்ணத்துடன் அவரை நோக்கி வந்தான் வெங்கடாசலம்.

அந்தச் சமயத்தில்.......

"ஐயோ, அம்மா! நேற்றுக்கூட நன்றாயிருந்தாயே, இன்று எப்படி அம்மா போய்விட்டாய்?" என்ற தங்கத்தின் அழுகுரல் அவன் காதில் விழுந்து, அவனுடைய நெஞ்சைப் பிளந்தது; கையில் இருந்த எண்ணெய்க் கிண்ணத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு ஓடிப் போய்ப் பார்த்தான்-அபயாம்பாள் இந்த உலகத்தில் இல்லை!