பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இளைய பாரதத்தினன்


றக்குறைய ஒருமாத காலம் டெல்லியில் முகாம் செய்திருந்த பின்னர், சென்னையிலிருந்த தம் வீட்டுக்கு அன்றுதான் திரும்பியிருந்தார் திரு. ஆத்மநாதன் ஐ.ஏ.எஸ்.

"சார், போஸ்ட்!" என்று வாசலிலிருந்து குரல் வந்தது.

"துரை உள்ளே வரமாட்டார் போல் இருக்கிறது; வெளியிலேயே இருந்துதான் குரல் கொடுப்பார்போல் இருக்கிறது!" என்று முணுமுணுத்த அவர், 'அபராஜிதா, அபராஜிதா! என்று குரல் கொடுத்தார்; பதில் இல்லை ; "அசோக், அசோக்!" என்றார்; அதற்கும் பதில் இல்லை; "எல்லாரும் இதற்குள் எங்கே போய் விட்டார்கள்?" என்று கேட்டுக்கொண்டே தம் அறையை விட்டு அவர் வெளியே வந்தார்.

அன்று மாலை 'மாதர் சங்க'த்தில் தான் நிகழ்த்தவிருந்த அரும்பெரும் உரையை அவசரம் அவசரமாகத் 'தயார்' செய்து கொண்டிருந்த அவருடைய மனைவி அனுசூயா, 'ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?' என்பது போல் எரிச்சலுடன் தலை நிமிர்ந்து, "அவர்களெல்லாம் பத்து நிமிஷத்துக்கு முன்னால்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனார்களே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்றாள்.

அவளுடைய பொறுமையை மேலும் சோதிப்பதுபோல் "அவர்கள்தான் பள்ளிக்கூடம் போனார்கள்; சமையற்காரன் எங்கே போய்விட்டான்?" என்றார் அவர்.

"அவன் வேலைதான் முடிந்துவிட்டதே, எங்கேயாவது அரட்டை.படிக்கப் போயிருப்பான்!"

"தோட்டக்காரன்?"

"அவனுக்கு நீங்கள் கலியாணம் செய்துவைத்து, 'அவுட்- ஹவு'ஸை ஒழித்துக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள், அதைவிட்டு அவன் எங்கே வெளியே வருகிறேன் என்கிறான்?" என்றாள் அவள்.

அவர் திரும்பினார்; அவள் மறுபடியும் உரை ‘தயா'ரிப்பதில் மூழ்கினாள்.

‘டிரிங்...டிரிங்...!'

சைக்கிள் மணியைத் தொடர்ந்து "சார், போஸ்ட்!" என்ற குரல் மீண்டும் வாசலிலிருந்து ஒலித்தது.