பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைய பாரதத்தினன்

637

"ஏன் பயன்படவில்லை?"

"அவர்கள் இன்னும் 'இரண்டு கால் பிராணிக'ளாகத் தானே இருந்து கொண்டிருக்கிறார்கள்? இல்லாவிட்டால் மாதம் நூறு ரூபாய்கூடக் கிடைக்காத வேலையில் இருந்து கொண்டு என் அப்பா என்னையும் சேர்த்து ஏழு பிள்ளைகளையும் இரண்டு பெண்களையும் 'நவக்கிரகங்கள்' மாதிரி பெற்று வைத்திருப்பாரா? அதனால் என்ன ஆயிற்று? இன்று அவருக்கும் கஷ்டம்; எங்களுக்கும் கஷ்டம். அன்பு இருக்க வேண்டிய இடத்தில் அலுப்பும் சலிப்பும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த லட்சணத்தில் எல்லாருக்கும் மூத்தவனான என்னை இந்த அளவுக்கு ஆளாக்கிவிடவே அவர் எத்தனையோ பேரிடம் தலையைச் சொறிந்து கொண்டு நின்றிருக்கவேண்டுமே!"

இதைக் கேட்டதும் ஏனோ தெரியவில்லை, ஆத்மநாதனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர் சிரித்துக் கொண்டே, "ஆமாம் ஆமாம், அதிலும் தீபாவளியும் பொங்கலும் நெருங்கும்போது அவருடைய தலை அடிக்கடி நமைக்க ஆரம்பித்துவிடும். சொறி, சொறி' என்று சொறிந்து கொண்டே வந்து நிற்பார்!" என்றார்.

"உங்களைப் போன்ற பெரிய மனிதர்களிடமிருந்து இனாம் வாங்குவதென்றால் சும்மாவா, சார்? தலையையும் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும்? உங்கள் காலிலும் விழுந்து எழுந்திருக்க வேண்டுமே!" என்றான் அவன் பெருமூச்சுடன்.

இது அவருக்கு என்னவோபோல் இருந்தது. "சரிசரி, நீ கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போ!" என்றார் சற்றே சிடுசிடுப்புடன்.

அவன் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அந்த ஆண்டு தீபாவளி வழக்கம்போல் நெருங்கிக் கொண்டிருந்தது. கடை வீதிகளில் மட்டுமல்ல; ஆத்மநாதன் போன்ற பெரிய மனிதர்களின் வீடுகளிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் முன்கூட்டியே கேட்டுக் கொண்டிருந்தது.

குமாஸ்தா வீட்டுக் குழந்தைகளே பட்டாசு வெடிக்கத் தீபாவளி வரும்வரை காத்திருக்காதபோது, அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகளா காத்திருக்கும்? அவை அடம்பிடித்து வாங்கி வெடித்தால், இவை அடம் பிடிக்காமலே வாங்கி வெடித்துக் கொண்டிருந்தன.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதே சகதர்மினி சகிதம் கடை வீதிக்குச் சென்று, தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் வேண்டிய புத்தாடைகளை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் ஆத்மநாதன். இன்னும் வேலைக்காரர்களுக்கு எடுக்க வேண்டியதுதான் பாக்கி. 'அதைத் தீபாவளிக்கு முதல் நாள் எடுத்துக் கொண்டால் போச்சு!'