பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்க்கட்சி

355

படுக்கையெல்லாம் ஏத்துவாங்க. ரொம்பக் காசுகூட இல்லை; ஓரணாத்தான்!- பார்க்கிலேயிருந்து ஸென்ட்ரஸ் டேசன் ரொம்ப கிட்ட!" என்று அவருக்கு தூபம் போட்டான் வெள்ளி நாயகம்.

சிக்கனத்தை உத்தேசித்துப் பெரிய மனிதர் அவன் சொன்னதை ஒப்புக் கொண்டார். வெள்ளிநாயகம் அவருடைய பெட்டி, படுக்கைகளைத்துக்கிக் கொண்டு பீச்ஸ்டேஷனைநோக்கி நடந்தான். பெரிய மனிதர் அவனைத் தொடர்ந்தார்.

வழியில் வெள்ளி நாயகத்துக்கு ஒரு சபலம் தட்டிற்று. பீச் ஸ்டேஷன்வரை சென்றால் ஐயா ஒரனா கொடுப்பாரோ, இரண்டனா கொடுப்பாரோ ஸென்ட்ரல் ஸ்டேஷன்வரை தானே சென்று அவரை வண்டியில் ஏற்றி விட்டால் எட்டணாவாவது கொடுக்க மாட்டாரா?-இவ்வாறு எண்ணியதும் அவன் அந்தப் பெரிய மனிதரை நோக்கி, "நானே ஸென்ட்ரல் வரை வந்து உங்களை வண்டி ஏத்தி விடட்டுங்களா?" என்றான். ஒரே கூலியாயிருந்தால் தமக்கும் செளகரியந்தானே என்று எண்ணி அவரும் "சரி!" என்றார்.

அவ்வளவுதான் வெள்ளி நாயகத்துக்குத் தெம்பு பிறந்துவிட்டது; அவன்குதிநடை போட்டுக் கொண்டு சென்றான். அன்றையக் கவலை தீர்ந்த பிறகு இந்த உலகத்தில் தன்னைப் பொறுத்தவரை அவனுக்கு வேறு எந்தக் கவலையும் இல்லையல்லவா?

ஜிகு ஜிக்கு.....ஜிகு ஜிக்கு....... ஜிகு ஜிக்கு..... ஜிகு ஜிக்கு....ஜிகு ஜிக்கு....

தலை தெறிக்கும் வேகத்தில் சென்னை மாநகரின் அமைதியை குலைத்துக் கொண்டு வந்த 'எலெக்ட்ரிக் ட்ரெயின்' பார்க் ஸ்டேஷனை அடைந்தது. அதற்குள் வரிசை வரிசையாய் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. இருந்தாலும், பெரிய மனிதர் கூலிக்காரனின் மூலம் தம்முடைய அந்தஸ்தை உலகத்துக்கு ஓரளவு 'வெளிச்சம்' போட்டுக் காட்டிக் கொண்டு வந்தது, தனி வெளிச்சமாய்த் தான் இருந்தது!

ஆயிற்று; இதோ ஸென்ட்ரஸ் ஸ்டேஷனின் மணிக்கூண்டு கம்பீரமாகத் தனக்கு எதிரே நிற்கிறது; இன்னும் இரண்டே நிமிஷத்தில் பிளாட்பாரத்தை அடைந்து விடலாம்.......

.....எட்டணாக் காசு இந்தக் கைமேல் 'டக்'கென்று விழும், தன்னிடம் ஏற்கெனவே எட்டணா இருக்கிறது. முழுசாக ஒரு ரூபாய்! இன்று வீட்டுக்கு இத்துடன் கம்பி நீட்டி விடலாம். அதோ, தங்கநாயகம் அண்ணன்கூடத் தனக்கு எதிரே சொல்லி வைத்தாற்போல வருகிறதே!