பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

விந்தன் கதைகள்

..........அது போட்டிருக்கிற ஊதாச் சட்டையும், சிவப்புப் பட்டையும், அதிலே 'போர்ட்டர்' என்று எழுதியிருக்கின்ற அழகும்-அடாடாடாடா!-ம், அண்ணனுக்கு என்ன குறைவு? தன்னைப் போலவா?-அடடே அண்ணன் ஏதோ பாட்டுக்கூடப் பாடுதே! என்ன பாட்டாயிருக்கும்?

.......ஆமாம்; அதுதான்! அதுவேதான்!- 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!-' நேற்று கேட்ட பாட்டை அண்ணன் அப்படியே பிடிச்சிகிச்சே!

ஐயோ, இது என்ன சங்கடம்?

..........அண்ணன் தன்னை ஏன் அப்படி முறைச்சி பார்க்குது? அதன் மீசை ஏன் அப்படித் துடிக்குது? கண்களில் கணத்துக்கு கணம் ஏன் அப்படிச் சிவப்பேறுகிறது? - ஒன்றும் புரியவில்லை தம்பிக்கு.

“என்னா அண்ணே!" என்று அது குழைந்தது.

'அண்ணே, அண்ணேன்னு சொல்லி ஆளை ஏய்க்கவா பார்க்கிற? 'இங்கே கூலி எடுத்துக்கிட்டு வர உனக்கு என்னடா அம்மாந் தைரியம் ? நான் இங்கே வேலை மெனக் கிட்டா இருக்கேன்?" என்று ஆவேசத்துடன் கூறி, அவன் தலைமேலிருந்த படுக்கையை பலவந்தமாகத் தூக்கித் தன் தலைமேல் வைத்துக்கொண்டு கையில இருந்த பெட்டியையும் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, நீங்க வாங்க. சாமி!"என்று அழைத்தது இது.

"அண்ணே, அண்ணே! நம்ம வாழ்வு. தாழ்வு எல்லாம்....."

"ஆமாம் போடா! நீயும் நானும் ஒரு கட்சியாயிருந்தாலும் நம்ம வயிறு நமக்கு 'எதிர்க்கட்சி' யாயிருக்கின்றதே!" என்று அதை பொருட்படுத்தாமல் இது நடையைக் கட்டிவிட்டது.

பெரிய மனிதர் தம்மைப் பாதிக்காத விஷயங்களில் எப்பொழுதுமே சட்டத்தையும், ஒழுங்கையுமே கடைப்பிடிப்பவர். ஆகவே அதை அத்துடன் விட்டு விட்டு, அவர் இதைத் தொடர்ந்து சென்றார்.

“எனக்கு கூலி ஒன்னும் இல்லிங்களா, சாமி!" என்றது அது.

நல்ல வேளையாக அப்போது ஒர் இளம் பெண் அந்த வழியாக வரவே, அவள் பார்க்கும்படியாக நாலணாவை எடுத்து வீசி எறிந்துவிட்டு, அவர் மேலே நடந்தார்!