பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



362

விந்தன் கதைகள்

"இதோ முதலாளியே போய்விட்டான்; 'மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன' என்று கடையை மூட முடிகிறதா?- எங்கே மூடமுடிகிறது? மூடினால் சட்ட விரோதம் என்பார்கள்!" என்று இரைந்து கொண்டே திண்ணையின் மேல் உட்கார்ந்தார்.

அதற்குள் நல்லமுத்துவின் குமாரர்கள் வந்து, "எங்களுக்கு ஒன்றும் தெரியாது; நீங்கள்தான் கிட்ட இருந்து அப்பாவை அடக்கம் செய்யவேணும்" என்று கருப்பையாவை வேண்டிக் கொண்டனர்.

"ஆகட்டும் என்று சொல்லிவிட்டு கருப்பையா அவர்களுக்காக மேல்துண்டை எடுத்து தம் கண்களைதுடைத்து விட்டுக் கொண்டார்.

மாலை மணி ஐந்து அல்லது ஐந்தரை இருக்கும். நல்ல முத்துவுக்கு தங்களுடைய 'கடைசி மரியாதை'யைச் செலுத்திவிட்டுப் போக வந்தவர்கள் கருப்பையாவின் வீட்டுத் திண்ணையில் கூடினார்கள். அவர்களில் தமக்குத் தெரிந்த ஒருவரை நோக்கி, "பார்த்தீர்களா, நம்ம செவிட்டுப் பிள்ளையாருக்கு வாரம் நூற்றெட்டுத் தேங்காய் சூறை விடுவாரே, அந்த நல்ல முத்துவின் கதியை' என்றார் கருப்பையா.

"ஆமாம் ஆமாம், அக்கிரமமா நடப்பவனுக்குத்தானே இது காலம்!" என்றார் அவர்.

"அது சரி. சர்க்கார் சிப்பந்தியை லஞ்சம் கொடுத்து, ஏமாற்றுவதைப் போலக் கடவுளையும் ஏமாற்ற முடியுமா?" என்றார் அவருக்கு அருகிலிருந்த ஒரு பகுத்தறிவுவாதி.

“நல்லமுத்துவைப் பற்றி உமக்கு ஏதாவது தெரிந்தால் பேசும்; தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரும்!” என்று அந்த மனிதரை நோக்கி சீறினார் ஆஸ்தீக சிகாமணி ஒருவர்.

"கடவுளை வழிபடுவதெல்லாம் மோட்சத்துக்குத் தானே? அந்த மோட்சத்தை அவர் அடைந்துவிட்டார்- அவ்வளவுதான் விஷயம்; அதற்காக நீங்கள் ஏன் இப்படி ஒருவர் மீது ஒருவர் எரிந்து விழுகிறீர்கள்" என்றார் சுத்த சமரச சன்மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட ஒரு சைவர்.

"வியாபார தந்திரத்தைப் பார்க்கவேண்டுமானால் நல்லமுத்துவிடம் தான் பார்க்கவேண்டும். சிரிக்க வேண்டியவர்களிடம் சிரித்து, அழ வேண்டியவர்களிடம் அழுது காரியத்தை சாதித்துக் கொள்வதில் அவருக்கு நிகர் அவர்தான்!” என்று