பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

விந்தன் கதைகள்

'பேத்து மாத்து' செய்வதை அவர் 'திறமை' என்று சாதிப்பார். இந்த ஒரு விஷயத்தில்தான் அவருக்கும் எனக்கும் கொஞ்சம் அபிப்பிராய பேதம், என்ன இருந்தாலும் மனிதன் தனக்காக மட்டும் வாழக் கூடாது, பாருங்கள்!" என்று தம் பேச்சை மேலும் தொடர்ந்தார்.

"ஆமாம், ஆமாம்; பிறருக்காக வாழ்வதில் உள்ள பெருமை வேறு எதிலுமே கிடையாதே!" என்றார் தனக்கென்று வாழாத ஒரு தகைமையாளர்.

“சர்க்கார் என்னதான் சட்டதிட்டங்கள் செய்தாலும் அவற்றில் கொஞ்சநஞ்சம் ஓட்டையும் இருக்கத்தானே செய்யும்? அந்த ஓட்டை உடைசல்களை நம்முடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா!" என்றார் கருப்பையா.

"சீசீ, அது என்ன வாழ்வு" என்று முகத்தை சுளித்தார் இன்ஸால்வென்ஸி பேர்வழி ஒருவர்.

"பாரதக் கதையில் யக்ஷன் தரும புத்திரனைப் பார்த்து. 'உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?' என்று கேட்கிறான். 'நாள்தோறும் பலர் மடிந்து கொண்டிருப்பதை பார்த்தும் எஞ்சியுள்ள மனிதர்கள் தாங்கள் நிலை பெற்று இருப்போம் என்று நம்புகிறார்களே, அதுதான் பெரிய ஆச்சரியம்!" என்று தரும புத்திரர் சொல்கிறார்.இதில் எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது பார்த்தீங்களா?" என்று சொல்லிக் கருப்பையா நெருப்பிலிட்ட நெய்யாய் உருகினார்.

இதைக்கேட்ட கோபாலசாமியோ ஒன்றும் புரியாமல் தேம்பினான். காலையில் அவர் சொல்லியனுப்பியவற்றை யெல்லாம் ஒரு முறைக்கு இருமுறையாக நினைவுகூர்ந்து பார்த்தான்- 'அவ்வளவும் அவர் சொன்னவையா அல்லது நம் கற்பனையா?" என்ற சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. 'எது எப்படியிருந்தாலும் உபரி தானியத்துக்காக நூறு ரூபாய் கொடுத்தது உண்மைதானே?' என்று எண்ணி அவன் ஒரு கணம் ஆறுதல் அடைந்தான். மறுகணம், "ஒருவேளை அதுவும் பொய்யோ! நம்மிடம் நூறு ரூபாய் கொடுத்ததாக நாம்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ!" என்று எண்ணி அவன் குழம்பினான். கறார் கருப்பையாவோ தமக்குத் தெரிந்த வேதாந்த உண்மைகளையெல்லாம் அள்ளி அள்ளி விட்டுக் கொண்டே இருந்தார். அவற்றைக்கேட்க கேட்க கோபாலசாமியின் சந்தேகம்