பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மிஸ் நளாயினி-1950

......யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, "ராஜா!" என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான் நடந்தது.

"ராஜா!"

"ஏன் அப்பா!"

"எதிர்வீட்டு ராதையைப் பார்த்தாயா?"

"இதென்ன அப்பா! உங்களுக்கு வேறு வேலை ஒன்று மில்லையா? எப்போது பார்த்தாலும் இவளைப் பார்த்தாயா, அவளைப் பார்த்தாயா என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பதுதானா வேலை?”

"அதற்கில்லை ராஜா......!"

"எதற்கில்லை?"

"அந்தப் பெண் பொழுது விடிந்து எத்தனை தரம் நம் வீட்டுக்கு வந்து வந்து போகிறாள், பார்த்தாயா?"

"வந்தால் என்ன, அப்பா? அவள் ஏதோ காரியமாகத் தானே வந்து விட்டுப் போகிறாள்?"

"என்ன காரியம்?"

"உங்களுக்குத் தெரியாதா? அவள்தான் சொன்னாளே, அப்பா ஹிந்து பத்திரிகை வாங்கி வரச் சொன்னார்!" என்று.

"உனக்கு உண்மை தெரியாது ராஜா, தெரிந்தால் இப்படிப் பேசமாட்டாய்!"

“என்ன உண்மை? அதைத்தான் சொல்லுங்களேன்?"

"சொல்கிறேன் ராஜா, சொல்கிறேன்! இன்று காலை நீ இங்கே இருக்கும் வரைதான் அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள். நீ வெளியே போனாயோ இல்லையோ, அவளைக் காணவேயில்லை. கடைசியில் 'என்னடா,'பெரிய மனிதராச்சே' என்று நானே பத்திரிகையை எடுத்துக் கொண்டு போனேன். அவளுடைய அப்பா வராந்தாவில் உலாவிக் கொண்டிருந்தார். அவரிடம் பத்திரிகையை நீட்டி, 'நீங்கள் கேட்டீர்களாமே' என்றேன். 'இல்லையே' என்றார். எனக்குத்துக்கி வாரிப் போட்டது. 'ஓஹோ' என்று சொல்லி மழுப்பி விட்டு வந்தேன்-எப்படியிருக்கிறது, கதை?- நானும் பார்க்கின்றேன்,