பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

விந்தன் கதைகள்

அவ்வளவுதான்; எல்லோரும் 'கொல்' என்று சிரித்தார்கள்.

அந்தச்சிரிப்பொலியைத் தொடர்ந்து, "இதென்ன நியூஸென்ஸ்! என்ற வகைச் சொல் படுக்கையறையிலிருந்து வந்தது.

எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர்; மத்தியானம் சாப்பிட்டுவிட்டுப் படுத்த எஜமானியம்மாள் அப்போதுதான்துக்கம் கலைந்து எழுந்து, கட்டிலின் மேல் உட்கார்ந்திருந்தாள்.

ஹாலில் மாட்டியிருந்த கடிகாரம் மணி ஆறு அடித்து ஓய்ந்தது.

"ஜம்பு, டேய் ஜம்பு....!"

இந்தக் குரலைக் கேட்டதும் சமையலறையிலிருந்த ஜம்பு கரண்டியும் கையுமாக ஓடோடியும் வந்து அவளுக்கு எதிரே நின்றான்.

"ஏண்டா இடியட், நான் எழுந்து எவ்வளவு நேரமாச்சு? காப்பி கொண்டு வந்து கொடுப்பதற்கு என்ன கேடு?"

"ஒண்ணுமில்லேம்மா; இதோ வந்துட்டேன்!” என்றுதடுமாறிக் கொண்டே சென்று, அடுத்த நிமிஷமே கையில் காப்பியுடன் உள்ளே நுழைந்தான் ஜம்பு.

எரிச்சலுடன் அதை வாங்கி அவன் முகத்தில் கொட்டி விட்டு எஜமானியம்மாள் ஹாலுக்கு வந்தாள். அவளைக் கண்டதும் குழந்தைகள் மூன்றும் பீதிநிறைந்த கண்களுடன் அப்பாவிடமிருந்து ஒதுங்கின.

"ஏன் சுஜாதா, என்மேல் இன்னுமா கோபம் உனக்கு" என்று குழைந்து கொண்டே எஜமானியம்மாளை நெருங்கினார் எஜமான்.

அவள் பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் அவரை எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.

இவ்வளவு தூரம் அவளுடைய கோபத்துக்கு அவர் ஆளாகியிருந்ததற்கு காரணம் இதுதான்:

எஜமானியம்மாளுக்கு ஒரு 'பிரண்ட்' உண்டு. ஜாலிலைப்பில் ஈடுபட்டிருந்த அந்த ப்ரெண்டுக்குச் சட்டைப் பை எப்போதுமே காலி?-எனவே. அடிக்கடி அதை இட்டு நிரப்ப வேண்டிய பொறுப்பு எஜமானியம்மாளைச் சார்ந்தது. அதற்காக 'அன்பளிப்பு’ என்னும் பேரால் அவளிடமிருந்து அவன் ஏதாவது, அவ்வப்போது பெற்றுக் கொள்வது வழக்கம். சாதாரணமாக அல்ல; கொஞ்சம் பிகுவுடன்தான்.