பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



378

விந்தன் கதைகள்

"ஏன் சுஜாதா, வெளியே உங்களை யாரும் பார்க்க வில்லையே?" என்று அவள் காதோடு காதாகக் கேட்டார் ஹரன்.

அவள் பேசாமல் இருந்தாள்.

"சரி, சாப்பிடப் போவோமா?" என்றார் அவர்.

இம்முறை அவள் பேசாமல் இருக்கவில்லை; "அது எனக்குத் தெரியும்; நீங்கள் ஒன்றும் என்னை அழைக்க வேண்டாம்!" என்றாள்.

இந்தச்சமயத்தில் உள்ளே தலைநீட்டியபடி, "எஜமான்!” என்று குரல் கொடுத்தான் கன்னையா.

அவன் குரலைக் கேட்டதும், "இன்னொன்று சொல்ல மறந்து விட்டேனே.....!" என்று ஆரம்பித்தார் அவர்.

“என்ன சொல்லித் தொலையுங்கள்!” என்று கேட்டாள் மிஸஸ் ஹரன்.

"கன்னையாவுக்கு...."

“என்ன, காலராவா?"

"இல்லை, சம்பளம்....."

"ஒ, அந்த 'டாங்கி' நான் சம்பளம் கொடுக்க வில்லை என்று சொல்லி விட்டானா? அவனை முதலில் வீட்டுக்கு அனுப்புங்கள்."

"இல்லை, நான்தானே கேட்டேன்....."

"அப்படியானால் என்மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று அர்த்தமாகிறது....!"

"ஐயய்யோ, இது என்ன அநியாயம்! உன்மீதாவது எனக்கு நம்பிக்கையில்லையாவது ? நல்லாச் சொன்னே!..... ஹிஹிஹி.....நல்லாச் சொன்னே!"

"இளித்தது போதும், நிறுத்துங்கள்!"

"இல்லை....."

“என்ன இல்லை...?”

"இளிக்கவில்லை!"

அதற்குமேல் சுஜாதா அங்கே நிற்கவில்லை; 'விர்ரென்று கன்னையாவை நோக்கி வந்து, "டேய் நாளையிலிருந்து நீ இங்கே தலைகாட்டக் கூடாது. ஆமாம் சொல்லி விட்டேன்" என்றாள்.